Last Updated : 04 Aug, 2021 03:22 AM

 

Published : 04 Aug 2021 03:22 AM
Last Updated : 04 Aug 2021 03:22 AM

அருமனை- மழுவஞ்சேரி சாலையில் - தேங்கி நிற்கும் கழிவுநீரால் தொடர் விபத்துகள் : சுகாதார சீர்கேட்டால் மக்கள் பாதிப்பு

அருமனையிலிருந்து மழுவஞ்சேரி செல்லும் சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குவதுடன், சுகாதார சீர்கேடும் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் பாதிப்பை எதிர் கொள்கின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் உள்ள புதுக்குளம் குடிநீர் சுத்திகரிப்பு மையம் அருகேஆதிதிராவிடர் காலனி முன்பு மழுவஞ்சேரி சாலை செல்கிறது. இந்த சாலை ஓரம் சுத்திகரிப்பு நிலையத்துக்கு தண்ணீர் கொண்டுசெல்லும் குழாய்களும், சுத்திகரித்த பின்பு குடிநீரை விநியோகிக்கும் குழாய்களும் செல்கின்றன. இப்பகுதியிலேயே கழிவுநீர் ஓடையும் செல்கிறது.

சாலையில் தேங்கும் கழிவுநீர்

ஆதி திராவிடர் காலனியைச் சுற்றியுள்ள சுமார் 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஓடை வழியாக செல்கிறது. ஓடையை முறையாக பராமரிக்காததால் சாலையோரம் அடைப்பு ஏற்பட்டு காலனி முன்புள்ள மழுவஞ்சேரி சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு ஆபத்தான பகுதியாக மாறியுள்ளது.

இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். குரூர், தெற்றிவிளை, மஞ்சாலுமூடு போன்ற அருகே உள்ள பகுதிகளுக்கு இச்சாலை வழியாக செல்லும் மக்கள் தினமும் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கழிவுநீர் ஓடை வழியாக குடிநீர் இணைப்புகளும் செல்வதால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. தேங்கி நிற்கும் கழிவுநீரில் கொசுக்கள் அதிகம் காணப்படுவதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள், வியாபாரிகள் நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இதுகுறித்து குமரி மாவட்ட நிர்வாகம், அருமனை பேரூராட்சி ஆகியவற்றில் அப்பகுதி மக்கள் முறையிட்டும் ஒன்றரை ஆண்டாக இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மழுவஞ்சேரி சாலையின் மேல்பகுதியில் கழிவுநீர் ஓடை சீரமைப்பு பணி முறையான திட்டமிடலின்றி ஆமைவேகத்தில் நடப்பதாக பொதுமக்கள் குற்றஞ் சாட்டுகின்றனர். பழுதான சாலையையும் முறையாக சீரமைத்து, கழிவுநீர் ஓடை வழியாகச் செல்லும்குடிநீர் குழாய்களை பாதுகாப்பான பாதையில் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொற்று நோயால் பாதிப்பு

இதுகுறித்து அருமனை ஆதிதிராவிடர் காலனி பகுதியை சேர்ந்த மதன் மதுரையன் கூறும்போது, ‘‘இப்பகுதியில் சேகரமாகும் கழிவுநீர் கீழ் பகுதியில் உள்ள மக்கள் குளிக்கும் வள்ளிசிறை ஓடையில் சேர்கிறது. இப்பகுதி வழியாகவே அருமனை மாறப்பாடி சந்திப்பு மற்றும் கோதையாறுக்கு மக்கள் செல்கின்றனர். மழைக்காலத்தில் இங்கு வசிக்கும் மக்கள் சுகாதாரமற்ற இடத்தில் வசிப்பதாகவே உணர்கின்றனர். அருகில் பள்ளிக்கூடம் இருப்பதால் மாணவ, மாணவிகளும் நோய் தொற்றுக்கு ஆளாகின்றனர்.

எனவே காலம் கடத்தாமல் கழிவுநீர் ஓடை மற்றும் பழுதான சாலையை சீரமைப்பதுடன், குடிநீர்குழாய்களையும் மாற்றி அமைக்க வேண்டும். இல்லையெனில் போராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ளோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x