Published : 03 Aug 2021 03:14 AM
Last Updated : 03 Aug 2021 03:14 AM

டிஜிட்டல் பண பரிவர்த்தனை தளம் இ-ருப்பி : பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

புதுடெல்லி

டிஜிட்டல் முறையிலான பணப் பரிவர்த்தனை தளத்தை (இ-ருப்பி) பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார்.

டிஜிட்டல் முறையிலான பணப்பரிவர்த்தனைக்கு மிகவும் அவசியமானது இந்தத் தளம். இதன்மூலம் கரன்சி பரிவர்த்தனை தேவையில்லை. நபர்களிடையிலான நேரடி தொடர்புக்கும் அவசியம் இல்லை. க்யூ ஆர் கோட் அல்லது குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மூலம் பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும்.

ஒருமுறை பணம் பரிவர்த்தனை செய்யும் வசதி கொண்டது. இதனால் கடன் அட்டை அல்லது இணையதள வங்கி சேவை இணைப்பு உள்ளிட்ட வசதிகள் எதுவும் தேவையில்லை. பணப் பரிவர்த்தனையை ஏற்போர் இத்தகைய வசதிகள் ஏதுமின்றி பணத்தைப் பெற முடியும்.

இந்த பணப் பரிவர்த்தனை தளத்தை தேசிய பேமென்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (என்பிசிஐ) உருவாக்கியுள்ளது. இந்த திட்டத்தைத் தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

இ-ருப்பி வவுச்சர், நேரடி பணப் பரிவர்த்தனை மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை மக்கள் பெறுவதில் பெருமளவு மாற்றத்தை ஏற்படுத்தும் எவருக்கு நலத் திட்டப் பணிகள் கிடைக்க வேண்டுமோ அவருக்கு வெளிப்படையான முறையில் இடைத்தரகரின் குறுக்கீடு இன்றி கிடைக்க வழியேற்படுத்தும்.

இ-ருப்பி வவுச்சர் மூலம் பணப் பரிவர்த்தனை செய்வதற்கு குறிப்பிட்ட பணிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும். நாம் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தின் மூலம் ஏழைகளும் பயன்பெறும் வகையில் இருக்க வேண்டும். அதேபோல இது வெளிப்படைத் தன்மையுடன் இருப்பதால் அரசின் நேரடி பணப் பரிவர்த்தனை பலன்களை பொதுமக்களுக்கு வழங்க (டிபிடி) இது உதவும்.

அரசின் நேரடி பணப் பரிமாற்றம் (டிபிடி) மூலம் 90 கோடி மக்கள் பயனடைகின்றனர். ரேஷன், சமையல் எரிவாயு சிலிண்டர், மருத்துவ வசதி, ஓய்வூதியம், உர மானியம், கல்வி உதவி மட்டுமின்றி விவசாயிகளும் நேரடியாக மானிய உதவி உள்ளிட்டவற்றைப் பெறுகின்றனர்.

தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்துவதில் பிற நாடுகளுக்கு இந்தியா முன்மாதிரியாகத் திகழ்கிறது. அதேசமயம் புத்தாக்க உருவாக்கங்கள் மற்றும் அதைப்பயன்படுத்துவதிலும், தொழில்நுட்ப வளர்ச்சி அது சார்ந்த சேவைகளை பிற நாடுகளுக்கு அளிக்கும் நிலைக்கு வளர்ச்சியடைந்த நிலையில் திகழ்கிறது. கடந்த 7 ஆண்டுகளில் டிஜிட்டல் கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க இலக்கு எட்டப்பட்டுள்ளது. இதை உலகமே இன்று பாராட்டுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தனியார் நிறுவனங்களும் தங்களது பணியாளர்களுக்கு இத்தகைய இ-வவுச்சரை நிறுவன சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் (சிஎஸ்ஆர்) வழங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x