Published : 03 Aug 2021 03:14 AM
Last Updated : 03 Aug 2021 03:14 AM

ஒலிம்பிக் - வட்டு எறிதலில் கமல்பிரீத் கவுர் ஏமாற்றம் - ஹாக்கியில் அரை இறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்தது இந்திய மகளிர் அணி :

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான ஹாக்கி கால் இறுதிச் சுற்றில் இந்திய அணி முதன்முறையாக அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறி வரலாற்று சாதனை படைத்தது.

டோக்கியோவில் நடைபெற்று வரும் 32-வது ஒலிம்பிக் திரு விழாவில் நேற்று மகளிர் ஹாக்கி யில் நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் 3 முறை சாம்பியனும், உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள அணியுமான ஆஸ்திரேலியாவை, 9-வது இடத்தில் உள்ள இந்திய அணி எதிர்கொண்டது. 2-வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய வீராங்கனையான அம்ரோசியா மலோன் இலக்கை நோக்கி அடித்த பந்து கோல் கம்பத்தின் தூண் மீது பட்டு விலகிச் சென்றது.

இதன் பின்னர் இந்திய அணியினர் ஆக்ரோஷ அணுகுமுறையை கையாண்டனர். 9-வதுநிமிடத்தில் வந்தனா கட்டாரியாஅடித்த பந்தை கேப்டன் ராணிராம்பால் இலக்கை நோக்கிதிருப்பிவிட்டார். ஆனால் பந்துதுரதிருஷ்டவசமாக கோல் வலையின் பின்புறம் பட்டு ஏமாற்றம் அளித்தது.

10-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் புரூக் பெரிஸ், இலக்கை நோக்கி அடித்த பந்து விலகிச் சென்றது. அடுத்த சில நிமிடங்களில் இந்தியாவின் ஷர்மிளா தேவியின் கோல் அடிக்கும் முயற்சியை ஆஸ்திரேலியாவின் கோல்கீப்பர் ரேச்சல் லிஞ்ச் தடுத்தார். இந்தியாவின் வேகமும் உறுதியும் ஆஸ்திரேலியர்களை ஆச்சரியப்படுத்தியது. ஏனெனில் அவர்கள் டிபன்ஸின்போது கலக்கமடைந்தனர்.

20-வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த அணியின் கோல்அடிக்கும் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டார் இந்திய அணியின் கோல்கீப்பர் சவீதா. 22-வதுநிமிடத்தில் இந்திய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி குர்ஜித் கவுர் கோல் அடிக்க இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது.

25-வது, 33-வது நிமிடங்களில் ஆஸ்திரேலியவின் எமிலி சால்கர், மரியா வில்லியம்ஸின் கோல் அடிக்கும் முயற்சியை தகர்த்தார் சவீதா. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து 3 பெனால்டி கார்னர் வாய்ப்புகளை ஆஸ்திரேலியா பெற்றது. ஆனால் சவீதா, தீப்கிரேஸ் தலைமையிலான இந்தியடிபன்ஸ், அவற்றை தகர்த்தெறிந்தது.

கடைசி 8 நிமிடங்களில் ஆஸ்திரேலிய அணிக்கு மேலும் 4 பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் இந்திய தடுப்பு அரண்களை அந்த அணியால் உடைக்க முடியாமல் போனது. முடிவில் இந்திய மகளிர் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது. அரை இறுதியில் இந்திய அணியானது, அர்ஜென்டினாவை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் நாளை நடைபெறுகிறது.

கமல்பிரீத் கவுர்

மகளிருக்கான வட்டு எறிதல் இறுதிச் சுற்றில் இந்தியாவின் கமல்பிரீத் கவுர் 63.70 மீட்டர் தூரம் எறிந்து 6-வது இடமே பிடித்தார். அமெரிக்காவின் வலேரிஆல்மன் 68.98 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றார். ஜெர்மனியின் கிறிஸ்டின் புடன்ஸ் (66.86 மீ) வெள்ளிப் பதக்கமும் கியூபாவின் யைம் பெரெஸ் (65.72 மீ) வெண்கலமும் பெற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x