Published : 03 Aug 2021 03:14 AM
Last Updated : 03 Aug 2021 03:14 AM

பேரவை அரங்கில் கருணாநிதி உருவப் படம் திறப்பு - முதல்வராக மகிழ்கிறேன்.. கருணாநிதி மகனாக நெகிழ்கிறேன் : சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் உருக்கம்

கருணாநிதியின் உருவப் படத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைப்பதைக் கண்டு தமிழக முதல்வராக மகிழ்கிறேன், கருணாநிதியின் மகனாக நெகிழ்கிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கத்துடன் கூறினார்.

தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்பட திறப்பு விழா தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை அரங்கில் நேற்று நடைபெற்றது. கருணாநிதி உருவப் படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்திறந்து வைத்தார். விழாவில், அனைவரையும் வரவேற்று, பேரவைத் தலைவர் மு.அப்பாவு பேசியதாவது:

கடந்த 1921-ல் தொடங்கப்பட்ட அன்றைய சென்னை மாகாண சட்டப்பேரவையே இந்தியாவில் தென்மாநிலங்களின் தாய் சட்டப்பேரவையாக விளங்குகிறது. இன்றுஇந்தியாவில் இருக்கும் அனைத்து மாநில முதல்வர்களும் சுதந்திர தினத்தில் தேசியக் கொடி ஏற்ற உரிமை பெற்று தந்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, சிறப்புரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

பட்டியலின, பழங்குடியின மக்களின் நலனுக்காக வாதிடுவதில், போராடுவதில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர் நமதுகுடியரசுத் தலைவர். சமூகநீதியை தன் வாழ்வின் இலக்காக கொண்டவர். அவர் இங்கு வந்திருப்பது நாம் அனைவரும் பெருமைப்படக்கூடிய ஒன்றாகும்.

பழமையும், வரலாற்றுச் சிறப்பும் கொண்ட இந்த சட்டப்பேரவை கடந்த 100 ஆண்டுகளில் பல புதுமையான சட்டங்களை, முன்னோடி திட்டங்களை உருவாக்கி, சமதர்ம சமூகத்தை படைக்க வழி வகுத்துள்ளது.

நூற்றாண்டு விழா கொண்டாடும் இப்பேரவையில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மறைந்தமுன்னாள் முதல்வர் மு.கருணாநிதியை நினைவுகூர்ந்து அவரது உருவப் படத்தை திறந்து வைத்திருப்பது அனைத்துக்கும் முத்தாய்ப்பாக அமைந்துள்ளது.

முதல்வராக, எதிர்க்கட்சித் தலைவராக, அமைச்சராக, உறுப்பினராக பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி பலரது பாராட்டுகளையும் அன்பையும் பெற்றவர் கருணாநிதி. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவது, மாணவர்கள் உயர்கல்வி பயில ஏதுவாக நுழைவுத்தேர்வை ரத்து செய்வது என பல்வேறு புரட்சிகர சீர்த்திருத்த தீர்மானங்களையும், சட்டங்களையும் இயற்றியவர் கருணாநிதி.

அவரது படத்தை பார்க்கும்போது இன்னும் நம் முன்னால் இருந்து நம்மை வழிநடத்தும் முதல்வராக அவரை காண்கிறேன். நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர், கருணாநிதியின் உருவப் படத்தை திறந்து வைப்பதை எண்ணி தமிழக முதல்வராக மகிழ்கிறேன், கலைஞரின் மகனாக நெகிழ்கிறேன்.

இனி வரும் காலங்களில் ஆக.2-ம் நாள் வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கத்தக்க நாள் என்ற சிறப்பை பெற்றிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழில் பேசிய குடியரசுத் தலைவர்

சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது விழாப்பேருரையின் தொடக்கத்தில்,‘‘இன்றைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் கலைஞர்மு.கருணாநிதியின் திருவுருவப் படத்தை திறந்து வைப்பதில்மகிழ்ச்சி அடைகிறேன். உண்மையில் இது ஒரு முக்கியத்துவம் மிக்கநாள்’’ என்று தமிழில் பேசினார். ‘மந்திரம் கற்போம் வினைத் தந்திரம்கற்போம், வானையளப்போம், கடல் மீனையளப்போம் சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம், சந்தித்தெரு பெருக்கும் சாத்திரம் கற்போம்’ என்று பாரதியின் கவிதைகளையும் தமிழில் வாசித்தார்.

சட்டப்பேரவை நூற்றாண்டு விழா, கருணாநிதி படத்திறப்பு விழா என இரண்டுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த விழாவை அதிமுக புறக்கணித்துவிட்டது. இருப்பினும் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, பாமக, தமாகா கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றனர். சட்டப்பேரவை முன்னாள் தலைவர்கள் சேடப்பட்டி முத்தையா, ஆவுடையப்பன் ஆகியோர் பங்கேற்றனர்.

பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் அமரும் வரிசையில் கூட்டணி, எதிர்க்கட்சிகளின் தலைவர்களும், பின்புறம் எம்பிக்கள், கூட்டணி கட்சி எம்பிக்கள் அமர்ந்திருந்தனர். ஆளுங்கட்சி வரிசையில் முதலில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, அமைச்சர்கள், திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் அமர்ந்திருந்தனர். மேல் மாடத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் அமர்ந்திருந்தனர்.

விழாவையொட்டி, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘நூறு ஆண்டுகளுக்கு முன்பு வகுப்புவாரி இடஒதுக்கீடு அறிமுகமான சட்டப்பேரவையில் சமூக நீதிக்கான குரல் தொடர்ந்து ஒலிக்கிறது. சமூக நீதிக்கு சோதனை வரும்போதெல்லாம் நாட்டை வழிநடத்த வேண்டிய வரலாற்றுக் கடமையை, தந்தை பெரியார் காட்டிய வழியில் தொடர்ந்து செய்திடுவோம்!’ என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x