Published : 03 Aug 2021 03:14 AM
Last Updated : 03 Aug 2021 03:14 AM

தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழா கோலாகலம் - இறுதி மூச்சுவரை மக்களுக்காக பாடுபட்டவர் கருணாநிதி : பேரவை அரங்கில் படத்தை திறந்து வைத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புகழாரம்

தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பேரவை அரங்கில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்தை திறந்து வைத்தார். அருகில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் மு.க.ஸ்டாலின், பேரவைத் தலைவர் மு.அப்பாவு, துணைத் தலைவர் கு.பிச்சாண்டி ஆகியோர்.

சென்னை

தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழா கோலாகலமாக நடந்தது. பேரவை அரங்கில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்தை குடி யரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். அப்போது, தனது இறுதி மூச்சுவரை தாழ்த்தப் பட்ட மக்களுக்காகவும், ஏழைகளுக் காகவும் பாடுபட்டவர் கருணாநிதி என்று புகழாரம் சூட்டினார்.

தமிழக சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழா மற்றும் பேரவை அரங்கில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படம் திறப்பு விழா நேற்று மாலை கோலாகலமாக நடந்தது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை அரங்கில் நடந்த விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந் தினராக பங்கேற்று, கருணாநிதி யின் உருவப்படத்தை திறந்து வைத்தார்.

விழாவில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து நேற்று பிற்பகல் சென்னை வந்த குடியரசுத் தலைவரை விமான நிலையத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச் சர்கள் வரவேற்றனர். அங்கிருந்து ஆளுநர் மாளிகைக்கு சென்ற குடியரசுத் தலைவர் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். மாலை 4.35 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு 4.55-க்கு தலைமைச் செயலகம் வந்தார். அங்கு அவரை ஆளுநர், முதல்வர், பேரவைத் தலைவர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

நினைவுப் பரிசு

5.05 மணிக்கு குடியரசுத் தலை வர் ராம்நாத் கோவிந்த் பேரவை அரங்கத்துக்கு வந்தார். அதன் பின் விழா தொடங்கியது. பேர வைத் தலைவர் மு.அப்பாவு அனை வரையும் வரவேற்றுப் பேசினார். அப்போது, சட்டப்பேரவையின் நூற்றாண்டு குறித்தும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சாத னைகள் குறித்தும் விளக்கினார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோருக்கு பொன் னாடை, புத்தகம், நினைவுப் பரிசு ஆகியவற்றை முதல்வர் வழங் கினார். முதல்வருக்கு பேரவைத் தலைவர் நினைவுப் பரிசு வழங்கினார்.

அதைத் தொடர்ந்து பேரவை அரங்கில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணா நிதியின் உருவப்படத்தை குடி யரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.

விழாவில் குடியரசுத் தலைவர் பேசியதாவது:

வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த நிகழ்வில் முன்னாள் முதல் வர் கருணாநிதியின் படத்தை திறந்து வைத்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். மெட்ராஸ் சட்டமன்ற கவுன்சில் என பெயரிடப்பட்டிருந்த தமிழக சட்டப்பேரவையின் நூற் றாண்டு விழாவை கொண்டாடு கிறோம். ஆகஸ்ட் மாதம் நமக் கெல்லாம் முக்கியமான மாதம் ஆகும். இந்த மாதத்தில்தான் சுதந் திர தினவிழாவை கொண்டாடு கிறோம். இன்றைக்கு நமது நாடு பல்வேறு துறைகளில் மிகப்பெரிய அளவில் முன்னேறியுள்ளது. நாட்டு மக்கள் மற்றும் தலைவர்களின் கூட்டு உழைப்பே இந்த உயர்வுக் குக் காரணம்.

மெட்ராஸ் சட்டப்பேரவை கவுன் சிலின் வரலாறு 1861-ல் இருந்து தொடங்குகிறது. இந்த அமைப்பு தான் 1921-ல் சட்டம் இயற்றும் சட்டப்பேரவையாக உருவாக்கப் பட்டது. காலனி ஆதிக்கத்தில் இந்த அமைப்பு செயல்பட பல்வேறு வரையறைகளும், சவால்களும் இருந்தன என்பது உண்மை. சாதி, சமூகம் மற்றும் பிற அம்சங்களின் அடிப்படையில் ஏராளமான தனித்தனி தொகுதிகளும் இருந்தன. எனினும் ஒரு பொறுப்பான அரசு உருவாக அது வழிகோலியது. சென்னை மாகாணப் பகுதி மக் களின் கனவுகளையும், விருப்பங் களையும் புதிய சட்டப்பேரவை மூலம் வெளிப்படுத்த முடிந்தது.

புரட்சிகர எண்ணங்கள்

மக்களின் கனவுகளை நன வாக்கும் ஒரு தளமாக நீதிக் கட்சி இருந்தது. ஏழைகளை மேம் படுத்துவதற்கும், சமூக கொடுமை களை ஒழிப்பதற்கும் ஜனநாயக வேர்களின் வளர்ச்சிக்கும் இந்த சட்டப்பேரவை பெரும் பங்காற்றி யுள்ளது. தேவதாசி முறை ஒழிப்பு, விதவை மறுமணம், விவசாய நிலம் பகிர்வு போன்றவை சமூ கத்தை மாற்றிய புரட்சிகர எண் ணங்கள் ஆகும்.

மண்ணின் சிறப்பு வாய்ந்த தலைவர்களை சட்டப்பேரவையில் கவுரவிக்கும் பாரம்பரியத்தை அறிந்து மகிழ்கிறேன். திருவள்ளுவர், மகாத்மா காந்தி, ராஜாஜி, அண்ணாதுரை, காமராஜர், அம்பேத்கர், பெரியார் தொடங்கி எம்ஜிஆர், ஜெயலலிதா, வ.உ.சி., ராமசாமி படையாச்சி, ஓமந்தூரார் வரை பல்வேறு தலைவர்களின் படங்கள் சட்டப்பேரவை மண்டபத்தில் உள்ளன. அந்த வரிசையில், தமிழக மக்களுக்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்த கருணாநிதியின் படமும் இப்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மொழி மீது ஆர்வம்

கருணாநிதி தமிழகத்தில் நீண்ட காலம் ஆட்சி செய்தவர். தனி முத்திரையை பதித்துச் சென்றுள்ளார். இளமைப் பருவத்திலேயே தனது அரசியல் வாழ்வை தொடங்கியவர். தன் இறுதிமூச்சு வரை தாழ்த்தப்பட்ட மக்களுக்காவும், ஏழைகளுக்காகவும் பாடுபட்டவர். தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் சினிமாவுக்கும் அளப்பரிய பங்களிப்புகளை செய்துள்ளார். பொதுவாகவே மொழி மீது ஆர்வம் கொண்ட அரசியல் தலைவர்கள் மிகவும் குறைவு. ஆனால், கருணாநிதி தமிழ் மொழி மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். தமிழ் மிகப் பழமையான மொழிகளில் ஒன்று. உலகம் முழுவதும் அதன் வளமான பாரம்பரியத்தில் பெருமை கொள்கிறது. தமிழ் மொழிக்கு செம்மொழி அங்கீகாரம் கிடைப்பதை உறுதி செய்தவர் கருணாநிதி. தேசிய இயக்கத் தலைவர்களுடன் நெருங்கிய உறவு கொண் டிருந்தார்.

நம் நாட்டின் வளர்ச்சிக்காக எத்தனையோ தலைவர்கள் பாடுபட்டுள்ளனர். அவர்களுக்கு இந்த நாடு நன்றிக்கடன் பட்டிருக்கிறது. அவர்களைப்போல் நாமும் நாட்டை உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்ல நமது பங்கை ஆற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவுக்கு தலைமையேற்ற ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசியதாவது:

தமிழக சட்டப்பேரவையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இந்த சட்டங்கள் அனைத்தும் தமிழகத்தை வளமான மாநிலமாக உருவாக்குவதற்கு வழிவகுத்தன.

இந்த சட்டப்பேரவை பல பெருந்தலைவர்களை கண்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைக்கு ஒரு பெரிய வரலாறு உண்டு. சமூக நீதி, தீண்டாமை ஒழிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன், கல்வி, வறுமை ஒழிப்பு, மூன்றாம் பாலினத்தவர் உள்ளிட்ட விளிம்பு நிலையில் உள்ள மக்களின் நலன் போன்ற முன்னோடித் திட்டங்களும் இதில் அடங்கும். இவற்றில் பல திட்டங்கள் நம் நாட்டின் கொள்கைகள் மற்றும் திட்டப் பணிகளுக்கு அடித்தளமாக அமைந்துள்ளன.

முன்னாள் முதல்வர் கருணாநிதி, தன்னுடைய பேச்சுத் திறமையால் மக்களை ஈர்த்தார். 5 முறை தமிழகத்தின் முதல்வராக இருந்ததும், போட்டியிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்றதும் உண்மையில் குறிப்பிடத்தக்க சாதனையாகும். அவர் இறக்கும்வரை இந்த சபையின் உறுப்பினராக இருந்தார். பரந்த அறிவாற்றல் கொண்டு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய கருணாநிதி ஆற்றிய பணிகளை நாம் பாராட்ட வேண்டும்.

அவரின் புகழுக்கு ஆதாரமாகவும் அவரது பெருமைக்கு காரணமாகவும் திகழ்ந்தது தமிழ் மொழியின் மீது அவருக்கு இருந்த அளப்பரிய திறமையேயாகும். இது அவரது அரசியல் எதிரிகளையும்கூட வசப்படுத்தியது. ஏழை மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்துக்கான எண்ணற்ற அர்ப்பணிப்பு, அவரது சேவையை பறைசாற்றுகிறது. குறிப்பாக, சாதி பாகுபாட்டை ஒழிப்பதற்கான சமத்துவபுரம் போன்ற திட்டங்களை கூறலாம். இவற்றை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும்.

அனைத்து குடியரசுத் தலைவர் கள், பிரதமர்கள், பல்வேறு மாநிலங் களின் முதல்வர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்களுடனும் நெருக்கமாக பழகியவர் கருணா நிதி. சட்டப்பேரவை உறுப்பினர் களுக்கு அவர் முன்மாதிரியாக திகழ்ந்தார்.

புதிதாக அமைக்கப்பட்ட 16-வது சட்டப்பேரவையின் உறுப்பினர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருக்கலாம். மாறுபட்ட அரசியல் சித்தாந்தங்களை சார்ந் தவர்களாக இருக்கலாம். இந்த நூற்றாண்டு விழா கொண்டாட்டத் தில், மக்களுக்கு சேவை செய் வதற்கும் மாநிலத்தின் முன்னேற்றத் துக்கும் ஒரு பொதுவான குறிக் கோளுடன் இணைந்து பாடுபடு மாறு நான் உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். இந்த சட்டப்பேரவை இனிவரும் காலத்திலும் நம் தேசத்துக்கு முன்னோடியாகத் திகழட்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தலைவர்கள் பங்கேற்பு

விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். இறுதியில் பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி நன்றி தெரிவித்தார். உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்ட எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக தலைவர் ஜி.கே.மணி, தமாகா தலை வர் ஜி.கே.வாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செய லாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழக வாழ் வுரிமை கட்சித் தலைவர் வேல் முருகன், கொமதேக தலைவர் ஈஸ்வரன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், தலை மைச் செயலர் வெ.இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகள் பங் கேற்றனர்.

‘யானை’யுடன் கருணாநிதி

சட்டப்பேரவை அரங்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படம், ஆளுங்கட்சி உறுப்பினர்கள் இருக்கைக்கு பின்புறம் வைக்கப்பட்டுள்ளது. தற்போது, கருணாநிதியின் படம் அதற்கு நேர் எதிரில் இல்லாமல், சற்று வலதுபுறமாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமரும் முதல் வரிசையில், சட்டப்பேரவை தலைவருக்கு இடதுபுறமாக அமைக்கப்பட்டுள்ளது.

படத்தில் வலது கையை யானை சிலையின் தலையில் வைத்தபடி, மஞ்சள் துண்டு அணிந்து கருணாநிதி நின்று கொண்டிருக்கிறார். அவரது பின்புறத்தில் திருவள்ளுவர் படம், புத்தக அலமாரி, அழகிய திரைச்சீலை ஆகியவை இடம் பெற்றுள்ளன. படத்தின் கீழே ‘காலம் பொன் போன்றது. கடமை கண் போன்றது’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. மிக தத்ரூபமான இந்த படத்தை அரசு ஆர்ட்ஸ் என்ற நிறுவனம் மூலம் வரைந்து பெறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x