Published : 03 Aug 2021 03:14 AM
Last Updated : 03 Aug 2021 03:14 AM

ஆக.15-ம் தேதி அனைத்து ஊராட்சிகளிலும் - கிராமசபைக் கூட்டங்கள் நடத்த கமல்ஹாசன் வலியுறுத்தல் :

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் 2 நாள் பயணமாக கோவை வந்துள்ளார். நேற்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரனை சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.

அதில் கூறியிருப்பதாவது: ஆக.15-ம் தேதி கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். கிராமசபையில் முன்வைக்கப்பட வேண்டிய கிராம ஊராட்சியின் வரவு செலவு அறிக்கை, வங்கிக் கணக்கு புத்தகங்கள், தணிக்கை அறிக்கை உள்ளிட்ட ஆவணங்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.

கிராம நலன் கருதி மக்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் முறையாக தீர்மானங்களாக பதிவு செய்யப்பட வேண்டும். கிராமசபை கூட்ட முடிவுக்கு பிறகு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் நகலானது பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும். தீர்மான நகல் கேட்கும் நபர்களுக்கு தாமதமின்றி தரப்படவேண்டும்.

கிராமசபைக் கூட்டத்தை வீடியோ, புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்த வேண்டும். கிராமசபை உறுப்பினர்கள், கிராமசபைக் கூட்ட நிகழ்வுகளை புகைப்படம், வீடியோ எடுப்பதற்கு அனுமதி தரப்பட வேண்டும். கிராமசபைக் கூட்டமானது ஊராட்சிக்குட்பட்ட அனைத்து குக்கிராமங்களிலும் நடத்தப்படுவதை உறுதி செய்வதற்காக சுழற்சி முறையில் வெவ்வேறு கிராமங்களில் நடத்தப்படவேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் கூறியதாவது: கடந்த ஆண்டு ஜனவரிக்குப் பிறகு கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறவில்லை என்பதே எங்களது குறை. அவை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கிறோம். நிதிநிலை அறிக்கையில் கிராமசபைக் கூட்டங்களுக்கான ஒதுக்கீடு, அதன் விவரங்களை விரிவாக அறிவிக்க வேண்டும். கரோனாவால் கோவையில் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டங்கள் நடத்தப்படவில்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x