Published : 03 Aug 2021 03:15 AM
Last Updated : 03 Aug 2021 03:15 AM

திருமூர்த்தி அணையிலிருந்து இன்று நீர் திறப்பு : 96 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்

சென்னை

திருமூர்த்தி அணையில் இருந்து விவசாய பயன்பாட்டுக்காக இன்று நீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம் 96 ஆயிரத்து 854 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற உள்ளன.

இது தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

திருப்பூர் மாவட்டம், தளி வாய்க்கால் வடபூதி நத்தம் கிராம நீரை பயன்படுத்துவோர் நலச் சங்க பிரதிநிதிகள் திருமூர்த்தி அணையிலிருந்து நீர்த் திறக்க கோரிக்கை விடுத்திருந்தனர். அதை ஏற்று, பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் பாலாறு பழைய ஆயக்கட்டு பாசனமான தளி வாய்க்கால் பாசனப் பகுதிகளுக்கு திருமூர்த்தி அணையிலிருந்து ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் அடுத்த ஆண்டு மே 31-ம் தேதி வரை 700 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் உடுமலை வட்டத்திலுள்ள 2 ஆயிரத்து 786 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட திருமூர்த்தி நீர்த்தேக்கத் திட்டக்குழு விவசாயிகளும் நீர் திறக்க கோரிக்கை விடுத்திருந்தனர். அதையும் ஏற்று, திருமூர்த்தி அணையிலிருந்து பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் பாலாறு படுகை 4-ம் மண்டலப் பாசனப் பகுதிகளில் உள்ள பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் 135 நாட்களுக்கு உரிய இடைவெளிவிட்டு 5 சுற்றுகளாக மொத்தம் 9 ஆயிரத்து 500 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவிட்டள்ளது. இதன் மூலம் கோவை மாவட்டம் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சூலூர் வட்டங்கள் மற்றும் திருப்பூர் மாவட்டம், உடுமலை, மடத்துக்குளம், பல்லடம், திருப்பூர், காங்கயம் மற்றும் தாராபுரம் வட்டங்களில் உள்ள 94 ஆயிரத்து 68 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x