Published : 02 Aug 2021 03:15 AM
Last Updated : 02 Aug 2021 03:15 AM

டோக்கியோ ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் - வெண்கல பதக்கம் வென்றார் பி.வி.சிந்து : 2-வது முறை பதக்கம் வென்று சரித்திர சாதனை படைத்தார்

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான பாட்மிண்டனில் இந்தியாவின் பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார்.

ஆடவர் ஹாக்கியில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது.

ஜப்பானின் டோக்கியோ நகரில் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் மகளிருக்கான பாட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் வெண்கல பதக்கத்துக்கான ஆட்டம் நேற்று நடந்தது. இதில் உலகத் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள இந்தியாவின் பி.வி.சிந்து, 9-வது இடத்தில் உள்ள சீனாவின் ஹி பிங் ஜியாவோவை எதிர்த்து விளையாடினார். 23 நிமிடங்கள் நடந்த முதல் செட்டை சிந்து 21-13 என கைப்பற்றினார். 2-வது செட்டில் பிங் ஜியாவோ சற்று சவால் கொடுத்தார். எனினும், சிந்து சிறப்பாக ஆடி, இந்த செட்டை 21-15 என கைப்பற்றினார். மொத்தம் 53 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் சிந்து 21-13, 21-15 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார்.

இதன்மூலம் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 2-வது முறையாகபதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார் பி.வி.சிந்து. இவர், கடந்த2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியிருந்தார். ஒலிம்பிக்கில் தனிநபர்பிரிவில் 2 முறை பதக்கம் வென்ற2-வது இந்தியர் என்ற பெருமையையும் சிந்து பெற்றுள்ளார். இதற்குமுன்பு மல்யுத்தத்தில் சுஷில் குமார்இருமுறை பதக்கம் கைப்பற்றியிருந்தார். அவர், கடந்த 2008-ம் ஆண்டுபெய்ஜிங் ஒலிம்பிக்கிலும், 2012-ம்ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கிலும் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் பி.வி.சிந்து கைப்பற்றியுள்ளது இந்தியாவின் 3-வது பதக்கமாகும். ஏற்கெனவே பளுதூக்குதலில் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். குத்துச்சண்டையில் லோவ்லினா போர்கோஹெய்ன் அரை இறுதிச் சுற்றுக்குமுன்னேறி குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கம் கைப்பற்றுவதை உறுதிப்படுத்தியிருந்தார். இந்நிலையில், பி.வி.சிந்து வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளில் காமன்வெல்த் விளையாட்டு, ஆசிய விளையாட்டு, பிடபிள்யூஎஃப் உலக டூர் பைனல்ஸ் ஆகிய பெரிய போட்டித் தொடர்களில் பங்கேற்ற பி.வி.சிந்து, பதக்கம் வென்றே நாடு திரும்பியுள்ளார். அந்த வரிசையில் தற்போது ஒலிம்பிக்கிலும் பதக்கம் வென்றுள்ளார். நேற்று முன்தினம் நடந்த அரை இறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்த போதிலும் மனச்சோர்வு அடையாமல் உறுதியுடன் விளையாடி பதக்கம் வென்றுநாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

குடியரசுத் தலைவர் வாழ்த்து

வெண்கலப் பதக்கம் வென்றுள்ள பி.வி.சிந்துவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ட்விட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘பி.வி.சிந்துஇரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்தியப்பெண். நிலைத்தன்மை, அர்ப்பணிப்பு மற்றும் சிறந்த தரத்துக்கு அவர் ஒரு புதிய அளவுகோலை அமைத்துள்ளார். இந்தியாவுக்கு பெருமை சேர்த்த அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்’ என தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘பி.வி.சிந்துவின் அற்புதமான செயல் திறனால் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைகிறோம். டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற அவருக்கு வாழ்த்துகள். அவர் எங்கள் மிகச் சிறந்த ஒலிம்பியன்களில் ஒருவர்’ என தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,‘தனது சிறப்பான ஆட்டத்தால் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளபி.வி.சிந்துவுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டுக்காக மேலும் பல பதக்கங்களை அவர் வருங்காலத்தில் வெல்லவாழ்த்துகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் சீனாவின் சென் யூ ஃபே 21-18, 19-21, 21-18 என்ற செட் கணக்கில் கடுமையாக போராடி, சீன தைபேவின் தை சூ-யிங்கை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.

ஹாக்கியில் அசத்தல்..

ஆடவருக்கான ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது. இந்திய அணி சார்பில் 7-வது நிமிடத்தில் தில்பிரீத் சிங்கும், 16-வது நிமிடத்தில் குர்ஜாந்த் சிங்கும், 57-வது நிமிடத்தில் ஹர்திக் சிங்கும் கோல் அடித்தனர். இந்த 3 கோல்களுமே பீல்டு கோல்களாக அடிக்கப்பட்டிருந்தது. அரை இறுதியில் இந்திய அணி, உலக சாம்பியனான பெல்ஜியத்தை நாளை சந்திக்கிறது.

ஒலிம்பிக் ஹாக்கியில் இந்திய அணி 49 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் அரை இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. கடைசியாக இந்திய அணி 1980-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றிருந்தது. அந்த ஒலிம்பிக்கில் 6 அணிகள் மட்டுமே பங்கேற்றிருந்ததால் அரை இறுதிச் சுற்று கிடையாது. அந்த வகையில் இந்திய அணி கடைசியாக கடந்த 1972-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் அரை இறுதிக்கு முன்னேறியிருந்தது. அதில், இந்திய அணி 0-2 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானிடம் தோல்வி கண்டிருந்தது.

மகளிர் ஹாக்கியில் இந்திய அணி காலிறுதியில் ஆஸ்திரேலிய அணியை இன்று எதிர்கொள்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x