Published : 02 Aug 2021 03:15 AM
Last Updated : 02 Aug 2021 03:15 AM

முல்லை பெரியாறு அணையை உருவாக்கிய - பென்னிகுயிக் நினைவு இல்லத்தை இடித்துவிட்டு கலைஞர் நூலகமா? : வரலாற்றை சிதைக்க வேண்டாம் என அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் கண்டனம்

முல்லை பெரியாறு அணையை உருவாக்கிய ஜான் பென்னிகுயிக், மதுரையில் வாழ்ந்த இடத்தை இடித்துவிட்டு, கலைஞர் நூலகம் அமைக்க அரசு திட்டமிடுவது கண்டிக்கத்தக்கது என்று அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கை:

தென் தமிழகத்தின் உயிர்நாடியாக விளங்கும் முல்லை பெரியாறு அணையை உருவாக்கிய கர்னல் ஜான் பென்னிகுயிக் நினைவு இல்லத்தை அகற்றி, அதை கலைஞர் நூலகமாக மாற்ற திமுக அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாக செய்தி வந்துள்ளது. நாட்டின் விடுதலைக்காக போராடிய தியாகிகள், சமுதாய மேம்பாட்டுக்கு பாடுபட்ட தலைவர்கள், தமிழ் மொழி வளர்ச்சிக்காக பாடுபட்டவர்களை போற்றி பெருமைப்படுத்த வேண்டியதும், அவர்களது பெருமைகளை எதிர்கால தலைமுறையினர் அறிந்து பின்பற்றும் வகையில் நினைவுச் சின்னங்கள் எழுப்பி மரியாதை செலுத்துவதும், அவர்கள் வாழ்ந்தஇல்லங்களை பேணிப் பாதுகாப்பதும் ஒரு நல்ல அரசின் கடமை.

அந்த வகையில், பல இடையூறுகளுக்கு இடையே தன் சொந்தபணத்தையும் செலவிட்டு முல்லை பெரியாறு அணையை உருவாக்கி, தென் தமிழக மக்களின் வாழ்வாதாரத்துக்கு வழிவகுத்த பென்னிகுயிக்கின் நினைவு இல்லம் மதுரையில் தமிழக அரசால் பேணிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அந்த நினைவு இல்லத்தை இடித்துவிட்டு, கலைஞர் நூலகம் அமைக்க திமுக அரசுதிட்டமிட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. கலைஞர் நூலகம் அமைய உள்ள அந்த கட்டிடத்தில் ஆங்கிலேய பொறியாளர் ஜான் பென்னிகுயிக் வாழ்ந்ததற்கான சாத்தியக்கூறு இல்லை என்றுமாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளதாக வந்திருக்கும் செய்தி அதைஉறுதிப்படுத்துகிறது. ஒரு வரலாற்றை அழித்து இன்னொரு வரலாற்றை உருவாக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது.

கருணாநிதி திறந்துவைத்த சிலை

மதுரையில் நத்தம் செல்லும் சாலையில் பென்னிகுயிக் வாழ்ந்ததாகவும், அதற்கு ஆதாரமாக ‘பெரியாறு இல்லம்’ என்று ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டும் இருந்ததாக தென் தமிழக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இது உண்மை என்பதால்தான், மதுரை மாநகரபொதுப்பணித் துறை வளாகத்தில் திமுக ஆட்சியில் கடந்த 2000 ஜூன் 15-ம் தேதி பென்னிகுயிக் முழு உருவச் சிலையை அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்துவைத்ததாகவும், அதற்கான கல்வெட்டில், இடம்பெற்றுள்ள வாசகங்களும் கருணாநிதியுடையது என்றும் தெரிவிக்கின்றனர்.

முல்லை பெரியாறு அணையை கட்டும் பணி பென்னிகுயிக்கிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், பாதிகட்டி முடிக்கப்பட்டபோது, அப்போதைய பிரிட்டிஷ் அரசு நிதி ஒதுக்காததால், இங்கிலாந்து சென்று தன் குடும்ப சொத்துகளை விற்று அதன்மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு அணையை கட்டிமுடித்தார். இதன் பயனாக, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள பல லட்சம் ஏக்கர்நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

அவரது தியாகத்தைப் போற்றும் வகையில், தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில், பென்னிகுயிக் நினைவு மணிமண்டபத்தை கடந்த 2013-ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். அந்த நிகழ்ச்சியில், புதிதாக கட்டப்பட்டு வரும் தேனி பேருந்து நிலையத்துக்கு ‘கர்னல் ஜான் பென்னிகுயிக்’ பெயர் சூட்டப்படும் என்றும் அறிவித்தார்.

தமிழக மக்கள், குறிப்பாக விவசாயிகளுக்காக முல்லை பெரியாறு அணையை உருவாக்கிய பென்னிகுயிக் நினைவு இல்லத்தை இடித்துவிட்டு, கலைஞர் பெயரில் நூலகம் அமைப்பது, சரித்திரத்தை சிதைப்பதற்கு சமம். எதிர்காலத்தில் அவரைப் பற்றி தெரிந்துகொள்ள வாய்ப்பு இல்லாத சூழ்நிலை உருவாகும். எனவே, அந்த முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். யாருக்கும் ஆட்சேபம் இல்லாத இடத்தில் கலைஞர் நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தென் தமிழக மக்கள், விவசாயிகளின் எதிர்ப்பை மீறி பென்னிகுயிக் நினைவு இல்லத்தில் கலைஞர் நூலகம் அமைக்கப்பட்டால், விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக போராட்டம் நடத்தும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித் துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x