Published : 02 Aug 2021 03:15 AM
Last Updated : 02 Aug 2021 03:15 AM

கடன்களுக்காக அடமானம் வைக்கப்பட்ட - திமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமியின் ரூ.197.79 கோடி சொத்துகள் விற்பனை : அறிவிப்பு வெளியிட்டது ஸ்டேட் வங்கி நிர்வாகம்

திமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி வங்கியில் வாங்கிய கடனுக்காக அடமானம் வைக்கப்பட்ட ரூ.197.79 கோடி மதிப்புள்ள சொத்துகளை விற்பனை செய்வதாக கோவையைச் சேர்ந்த ஸ்டேட் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கரூர் தொகுதி முன்னாள் எம்.பியும், அரவக்குறிச்சி தொகுதி முன்னாள் எம்எல்ஏவுமான கே.சி.பழனிசாமி(86) தற்போது திமுக சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினராக உள்ளார். தொழிலதிபரான இவருக்கு சொந்தமாக கரூர் மாவட்டம் மாயனூரில் கேசிபி பேக்கேஜ்ஜிங்ஸ் என்ற சாக்குப்பை உற்பத்தி நிறுவனம் செயல்பட்டு வந்தது. புதுச்சேரியில் தொழில் நிறுவனம் உள்ளது. கரூரில் வீடு உள்ளிட்ட சொத்துகள் உள்ளன.

2004-ம் ஆண்டு கரூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று 5 ஆண்டுகள் எம்.பி.யாக இருந்தார். 2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதே தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு, தோல்வியடைந்தார். அந்த தேர்தலின்போது, ரூ.300 கோடிக்கும் அதிகமாக சொத்து மதிப்பு காட்டி, இந்திய அளவில் எம்.பி வேட்பாளர்களில் அதிக சொத்து மதிப்பு காட்டியதில் 2-வது இடத்தில் இருந்தார்.

பின்னர், 2011-ம் ஆண்டு கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவானார். 2016-ம் ஆண்டு தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், தொகுதியில் வாக்காளர்களுக்கு பண விநியோகம் செய்தது தொடர்பான குற்றச்சாட்டால், தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு, அதே ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் தோல்வியடைந்தார்.

இந்நிலையில், தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, கே.சி.பழனிசாமி, அவரது மனைவி அன்னம்மாள், மகன் சிவராமன், மகள் கலையரசி பெயரில் உள்ள சொத்துகளை அடமானம் வைத்து, வங்கிகளில் ரூ.200 கோடிக்கு மேல் கடன் பெற்றிருந்தார்.

இந்நிலையில், ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகளில் அடமானமாக வைக்கப்பட்டுள்ள ரூ.197.79 கோடி மதிப்புள்ள சொத்துகளின் விற்பனை அறிவிப்பை கோவை ஸ்டேட் வங்கி நேற்று நாளிதழ்களில் வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஸ்டேட் வங்கி ரூ.81,00,54,930, கனரா வங்கி ரூ.57,16,63,451, யூனியன் வங்கி ரூ.35,39,55,747, ஐடிபிஐ வங்கி ரூ.24,22,26,555 என ரூ.197,79,00,683 கோடி சொத்துகள் விற்பனைக்கு வந்துள்ளன.

கரூர் வைஸ்யா வங்கியில் பெற்ற கடனில் பிணையப்படுத்துதலில் முன்னுரிமை பிரச்சினை உள்ளதால், அது மட்டும் விற்பனையில் சேர்க்கப்படவில்லை என அந்த விற்பனை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x