Published : 02 Aug 2021 03:16 AM
Last Updated : 02 Aug 2021 03:16 AM

அரசின் அனுமதி கிடைத்தவுடன் - விரைவில் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகள் : தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் தகவல்

அரசின் அனுமதி கிடைத்ததும் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகள் விரைவில் நடத்தப்படும் என்று மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் கே.லட்சுமி பிரியா தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில் பிப்ரவரி, ஆகஸ்ட் என ஆண்டுக்கு 2 முறை தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் ஆகிய தொழில்நுட்பத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. கரோனா பரவல் காரணமாக கடந்த 2020-ல் இத்தேர்வுகள் நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு பிப்ரவரியில் நடக்க இருந்த தொழில்நுட்பத் தேர்வுகளை ஏப்ரல் மாதம் நடத்த திட்டமிடப்பட்டு, அதற்கான விண்ணப்பங்களும் பெறப்பட்டன. தொடர்ந்து, தேர்வுக்கால அட்டவணையும் வெளியிடப் பட்டது.

ஆனால், கரோனா பாதிப்பால் அமல்படுத்தப்பட்ட பொது ஊரடங்கு மற்றும் நோய் பரவல்காரணமாக தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன. தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் வணிகவியல் பயிலகங்களும் மூடப்பட்டன. கரோனா பாதிப்பு குறைந்த நிலையில், 50 சதவீத மாணவர்களுடன் வணிகவியல் பயிலகங்கள் இயங்க தமிழக அரசு அண்மையில் அனுமதி வழங்கியது.

இதைத் தொடர்ந்து, தட்டச்சு, சுருக்கெழுத்து பயிற்சி நிலையங்கள் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடந்து வருகின்றன. ஏப்ரலில் நடத்தப்பட இருந்த தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்றுமாணவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதுகுறித்து மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்குநரும், தொழில்நுட்பத் தேர்வுகள் வாரியத்தின் தலைவருமான கே.லட்சுமி பிரியாவிடம் கேட்டபோது, ‘‘கரோனா பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட பிப்ரவரி கால தொழில்நுட்பத் தேர்வுகளை நடத்துவது குறித்து அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

அரசு அனுமதி வழங்கியதும், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விரைவில் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகள் நடத்தப்படும். அதேபோல, ஆகஸ்ட் கால தேர்வுகளையும் உடனடியாக நடத்த திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.

அரசு கணினி சான்றிதழ் தேர்வு குறித்து அவர் கூறும்போது, ‘‘கணினி சான்றிதழ் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெற்று வந்த நிலையில், உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு காரணமாக ஆன்லைன் பதிவு நிறுத்தப்பட்டது. இதுதொடர்பான வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வழக்கு முடிந்ததும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு கணினி தேர்வும் நடத்தப்படும்’’ என்றார்.

தமிழக அரசு துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணிகளுக்கு அரசு கணினி சான்றிதழ் தேர்வு தேர்ச்சி கட்டாயம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் உதவி சுற்றுலா அலுவலர், சுற்றுலா அலுவலர் பணிகளுக்கான தேர்வுகளுக்கும் அரசு கணினி சான்றிதழ் தேர்வு தேர்ச்சி அவசியம் என்பது குறிப் பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x