Published : 02 Aug 2021 03:16 AM
Last Updated : 02 Aug 2021 03:16 AM

தந்தை வாங்கிய கடனுக்காக மகனை கடத்தி தாக்குதல் : 2 பேர் கைது; 8 பேர் தலைமறைவு

சென்னை, ஆவடி, கொள்ளுமேடு, காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் சேகர் (21). இவர் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் அண்மையில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், ‘‘எனது தந்தையான மணி, ஆவடி பருத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவரிடம் கடன் பெற்றிருந்தார். அதைத் திருப்பி செலுத்த தாமதம் ஏற்பட்டது. இதனால், ஆத்திரம் அடைந்த சண்முகம் அடியாட்களுடன் வந்து என்னை காரில் கடத்திச் சென்று அடித்து துன்புறுத்தினார்.

மேலும் ரூ.2 லட்சம் பெற்றுக் கொண்டு என்னை விடுவித்தார். எனவே, தன்னைக் கடத்தி தாக்கியசண்முகம் மற்றும் உடன் வந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

அதன்படி போலீஸார் வழக்குப் பதிந்து கடத்தலில் தொடர்புடைய சண்முகத்தின் மகன் பாஸ்கர் (34), அவரது கூட்டாளிகள் நெற்குன்றம் ராஜேந்திரன் (24) ஆகிய இருவரைக் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சண்முகம் உள்ளிட்ட 8 பேரைத் தேடி வருகின்றனர்.

கடத்தல் குறித்து போலீஸார் கூறியதாவது:

மணி என்பவர், சண்முகத்திடம் சில வருடங்களுக்கு முன்பு ரூ.4 லட்சம் கடன் பெற்றுள்ளார். முதலில் ஒரு வருடம் மட்டும் வட்டி செலுத்திய மணி அதன் பிறகு பணம் செலுத்தாததால், சண்முகம் அடிக்கடி மணியின் வீட்டுக்குச் சென்று கடுமையாகப் பேசியதால், கடந்த 1 வருடத்துக்கு முன்பு மணி ரூ. 1 லட்சம் பணத்தை சண்முகத்திடம் கொடுத்துள்ளார்.

எனினும் மீதி பணம் ரூ.3 லட்சத்தை கேட்டு சண்முகம் அடிக்கடி தொந்தரவு கொடுத்து வந்த நிலையில், கடந்த மாதம் 27-ம் தேதி விடியற்காலை 5 மணியளவில், சண்முகம் சுமார் 10 நபர்களுடன் 3 கார்களில் மணியின் வீட்டுக்குச் சென்றபோது, மணி இல்லாததால், மணியின் மகன் சேகரை வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் சென்று ஓரிடத்தில் அடைத்து வைத்து, அடித்து துன்புறுத்தி, சேகரின் தந்தை மணியிடம் மீதி பணத்தை கேட்டு மிரட்டியுள்ளார். உடனே, மணி வேறிடத்தில் ரூ.2 லட்சத்தை தயார் செய்து சண்முகத்திடம் கொடுத்துள்ளார் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x