Published : 02 Aug 2021 03:18 AM
Last Updated : 02 Aug 2021 03:18 AM

மூத்த சித்த மருத்துவர் க.வேங்கடேசன் காலமானார் :

க.வேங்கடேசன்

சென்னை

தமிழகத்தின் மூத்த சித்த மருத்துவர் க.வேங்கடேசன் உடல்நலக் குறைவால் காலமானார்.

மூலிகைமணி இதழின் ஆசிரியர் மற்றும் மூத்த சித்த மருத்துவர் க.வேங்கடேசன் (வயது 75). உடல்நலக் குறைவால் கடந்த ஒருவாரமாக சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த இவர் நேற்று அதிகாலை உயிரிழந்தார்.

வட ஆற்காடு மாவட்டத்தில் காப்புக்கார வைத்திய பாரம்பரியத்தில், ஐந்தாம் தலைமுறை சித்த மருத்துவரான வேங்கடேசன் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் பயின்று, சென்னை பல்கலைக்கழகத்தில், ‘தமிழ் இலக்கியத்தில் சித்த மருத்துவம்’ எனும் தலைப்பில் முனைவர் பட்டம்பெற்றுள்ளார். இவரது ஆய்வு கையேடு தமிழ் மருத்துவ வரலாற்றுக்கு மிக முக்கிய பங்களிப்பாகவும், இவருடைய ஆய்வேடு பல ஆய்வாளர்களுக்கு இன்றும் வழிகாட்டியாகவும் உள்ளன.

கடந்த 50 ஆண்டுகளாக சித்தமருத்துவராக பணியாற்றிய வேங்கடேசன், தமிழகத்தின் தலைச்சிறந்த சித்த மருத்துவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு சித்த மருத்துவ வாரியத்தின் துணைத் தலைவர், இம்ப்காப்ஸ் கூட்டுறவு நிறுவனத்தின் இயக்குநர், டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் 9 ஆண்டுகள் பல்கலைக்கழக சித்த மருத்துவக் குழு உறுப்பினர், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்திலும் சித்த மருத்துவ குழு எனபல பொறுப்புகளில் இருந்துள் ளார்.

சென்னையில் அரசு சித்த மருத்துவக் கல்லூரி, தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் அமைய காரணமாக இருந்துள்ளார். டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவத் துறை, இவருடைய முயற்சியில் உருவாகியுள்ளது.

தமிழகத்தில் பல சவாலான மருத்துவச் சூழல்களில் பல ஆக்கப்பூர்வமான சித்த மருத்துவ ஆலோசனைகளை அரசுக்கு வழங்கியுள்ளார். சிக்குன்குனியா காய்ச்சல் ஏற்பட்டு தமிழகம் தடுமாறி, தவித்த சமயத்தில் நிலவேம்பு குடிநீரை தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும், அரசு இயந்திரத்தின் மூலம் கொண்டு சென்றுள்ளார்.

உலகத் தமிழ் மாநாடு, செம்மொழி மாநாட்டில் பங்கேற்றதுடன், பல மூலிகை மாநாடுகளையும், கண்காட்சிகளையும் நடத்தி மக்களிடையே சித்த மருத்துவ விழிப்புணர்வை ஏற்படுத்தி யுள்ளார்.

இவருக்கு மனைவி ருக்மணி, மகன்கள்மருத்துவர் பாலாஜி, மருத்துவர் பாரதிராஜா, மகள்கள் மருத்துவர் அபிராமி, மருத்துவர் அஜிதா, பேரன்கள், பேத்திகள் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x