Published : 01 Aug 2021 06:29 AM
Last Updated : 01 Aug 2021 06:29 AM

அசாம் பாஜக முதல்வர் மீது கொலை முயற்சி வழக்கு : எல்லையில் வன்முறை தொடர்பாக மிசோரம் மாநில காவல் துறை பதிவு

வடகிழக்கு மாநிலங்களான அசாமும், மிசோரமும் சுமார் 155 கி.மீ. எல்லையை பகிர்ந்துகொள்கின்றன. இரு மாநிலங்கள் இடையே எல்லைப் பிரச்சினைஇருந்து வருகிறது. இப்பிரச்சினையை தீர்க்க இரு மாநிலங்களும் கடந்த 1994 முதல் பலசுற்று பேச்சுவார்த்தை நடத்தின. என்றாலும் இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

அசாமில் தற்போது பாஜகவும் மிசோரமில் அதன் கூட்டணிக் கட்சியான மிசோ தேசிய முன்னணியும் ஆட்சியில் உள்ளன. இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை மிசோரம் மாநில நிர்வாகம் எல்லையில் 6.5 கி.மீ பகுதியை ஆக்கிரமித்ததாக அசாமின் சச்சார் மாவட்ட அதிகாரிகள் எல்லைக்கு வந்தனர். இதற்கு மிசோரம் மாநிலத்தின் கோலாசிப் மாவட்ட அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரி வித்தனர்.

இதையடுத்து இரு மாநில மக்களும் போலீஸாரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. கண்ணீர் புகைக்குண்டுகளும் வீசப்பட்டன. இதில் அசாம் மாநில போலீஸார் 6 பேர் உயிரிழந்தனர். இரு மாநிலங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இந்தப் பிரச்சினையில் இரு மாநில முதல்வர்களும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டினர். இதையடுத்து இப்பிரச்சினையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலையிட்டார். அவரிடம் பிரச்சினையை சுமூகமாக தீர்த்துக் கொள்வதாக இரு மாநில முதல்வர்களும் உறுதி அளித்தனர். எல்லையில் மத்திய பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டனர்.

இந்நிலையில் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அம்மாநில போலீஸ் மற்றும் நிர்வாக அதிகாரிகள் 6 பேர் மற்றும் அடையாளம் தெரியாத 200 போலீஸாருக்கு எதிராக மிசோரம் போலீஸார் நேற்று வழக்குப் பதிவு செய்தனர். கொலை முயற்சி, குற்றச்சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் அசாம் போலீஸ் ஐஜி அனுராக் அகர்வால், சச்சார் டிஐஜி தேவஜோதி முகர்ஜி, சச்சார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்திரகாந்த் நிம்பல்கர் உள்ளிட்ட 4 போலீஸ் அதிகாரிகள் மற்றும் கச்சார் துணை ஆணையர் கீர்த்தி ஜலால், சச்சார் மண்டல வன அதிகாரி சன்னிதியோ சவுத்ரி ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

அதேவேளையில் மிசோரம் மாநிலத்தின் மாநிலங்களவை எம்.பி., கோலாசிப் மாவட்ட காவல்கண்காணிப்பாளர், துணைஆணையர் உள்ளிட்ட 4 அதிகாரிகள் ஆகியோரை விசாரணைக்குவரும்படி அசாம் போலீஸார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

மேலும் கோலாசிப் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர அசாம் மாநிலத்தின் பாரக் பள்ளத்தாக்கு பகுதியின் 15 எம்எல்ஏக்கள் முடிவு செய் துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x