Published : 01 Aug 2021 06:29 AM
Last Updated : 01 Aug 2021 06:29 AM

கவுண்டம்பாளையத்தில் - தோண்டப்பட்டு சீரமைக்கப்படாத : குழியால் பொதுமக்கள் அவதி :

கவுண்டம்பாளையம் அருகே கேபிள் வயர் பதிக்க சாலையோரம் தோண்டப்பட்ட குழியை, விரைந்து மூட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையம் அருகே உயர்மட்டப் பாலம் கட்டும் பணி, நெடுஞ்சாலைத்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கவுண்டம்பாளையத்தில் சாலையின் இருபுறமும் சாதாரண குடியிருப்புகள், அடுக்குமாடி குடியிருப்புகள், கல்வி நிலையங்கள், தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் என ஏராளமானவை உள்ளன. பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இப்பகுதியில் வசிக்கின்றனர்.

மாநகராட்சியின் மேற்கு மண்டலம் 5-வது வார்டுக்கு உட்பட்ட கவுண்டம்பாளையத்தில், கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழித்தடத்தில், மேம்பாலம் அருகே சாலையின் ஓரம், கேபிள் வயர் பதிப்பு பணிகளுக்காக தோண்டப்பட்ட குழி நீண்ட நாட்களாக சரி செய்யப்படாமல் உள்ளதாக அப்பகுதி மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக கவுண்டம்பாளையம் பாலன் நகர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதி மக்கள் கூறியதாவது:

கவுண்டம்பாளையம் பாலன் நகர் அருகேயுள்ள நி்த்யா கார்டன் பகுதியில் இருந்து பாலன் நகர், அரசுப் பள்ளி,  வாரி வைபவ் அடுக்குமாடி குடியிருப்புப் பகுதி வரை ஏறத்தாழ 500 மீட்டர் தூரத்துக்கு சாலையின் ஓரம் குழி தோண்டப்பட்டுள்ளது. கடந்த நான்கரை மாதங்களுக்கு முன்னர் கேபிள் வயர் பதித்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக மேற்கண்ட குழி, சாலையின் தரைத்தளத்தில் இருந்து சுமார் மூன்றரை அடி ஆழத்துக்கு தோண்டப்பட்டது. நித்யா கார்டன், பாலன் நகர், அரசுப் பள்ளி, வாரி வைபவ் அடுக்குமாடி குடியிருப்பு ஆகியவற்றுக்கு செல்லும் வழித்தடத்தை மறிக்கும் வகையில் தோண்டப்பட்டுள்ள இந்தக் குழியால் மேற்கண்ட பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், பாதசாரிகள், வாகன ஓட்டுநர்கள் சென்று வர கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

குறிப்பாக, பாலன் நகர் அருகே வழித்தடம் முற்றிலும் மறிக்கப்பட்டுள்ளது. இதனால் பாலன் நகரில் இருந்து கவுண்டம்பாளையத்துக்கு செல்ல, பொதுமக்கள் சில கிலோமீட்டர் தூரம் சுற்றி பிரதான சாலைக்கு வரவேண்டியுள்ளது. அதேபோல், இந்தக் குழியால், வாரி வைபவ் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மக்களுக்கும் சென்று, வர இடையூறு ஏற்படுகிறது. விரைவாக பணியை முடிக்காததால், மழைநீரும், கழிவுநீரும் குழியில் தேங்கி சுகாதாரச் சீர்கேடும் ஏற்படுகிறது. பொதுமக்கள், வாகன ஓட்டுநர்கள் விபத்தில் சிக்கும் முன்னர், பணிகளை விரைவாக முடித்து குழியை மூட மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x