Published : 01 Aug 2021 06:30 AM
Last Updated : 01 Aug 2021 06:30 AM

பொதுமக்களை அலைக்கழித்த - வட்ட வழங்கல் அலுவலர் பணியிடை நீக்கம் : மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு

‘இந்து தமிழ்’ நாளிதழில் வெளியான செய்தி எதிரொலியாக பொதுமக்களை அலைக்கழித்து வந்த குன்றத்தூர் தாலுக்கா வட்ட வழங்கல் அலுவலர் பிரகாஷ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த அதிரடி நடவடிக்கைக்கு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் தாலுகாவில் வட்ட வழங்கல் அலுவலராக இருந்தவர் பிரகாஷ். இவர் தன்னுடைய பணியை சரிவர செய்யாமல் பொதுமக்களை அலைக்கழித்து வந்தார். மேலும் காரணமில்லாமல் மனுக்களை நிராகரித்து வந்தார்.

அனைத்து உரிய ஆவணங்களை வழங்கினாலும் மனுவை நிராகரித்து வந்தார். மேலும் இடைத்தரகர் மூலம் அணுகினால் மட்டுமே தீர்வு கிடைப்பதாகவும், குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் 5,000 வரை லஞ்சம் கேட்பதாகவும் இவர் மீது புகார் எழுந்தது. அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறியும் தொடர்ந்து இதே பணியை மேற்கொண்டு வந்தார்.

மாவட்ட நிர்வாகம் உத்தரவு

இந்நிலையில் இதுதொடர்பாக பொதுமக்கள் கருத்துகளுடன் விரிவான செய்தி ‘இந்து தமிழ்’ நாளிதழில் வெளியானது. இதையடுத்து தமிழக அரசு, சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் பிரகாஷை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில் வீ.சங்கீதா என்பவரை குன்றத்தூர் வட்ட வழங்கல் அலுவலராக புதிதாக நியமனம் செய்து மாவட்ட ஆட்சியர் மா. ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார். சம்பந்தப்பட்ட துணை வட்டாட்சியர் உடனடியாக பணியில் சேரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆட்சியருக்கு நன்றி

பொதுமக்களின் உண்மை நிலையை செய்தியாக வெளியிட்டு சம்பந்தப்பட்ட அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க உறுதுணையாக இருந்த ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு பொதுமக்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர். மேலும் உடனடியாக நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியருக்கும் பொதுமக்கள் நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x