Published : 01 Aug 2021 06:31 AM
Last Updated : 01 Aug 2021 06:31 AM

நவல்பட்டு- ஐடி பார்க் சாலையைசீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை :

திருச்சி: திருவெறும்பூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் நவல்பட்டு சாலையில் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் இடப்பற்றாக்குறை இருந்ததால் நவல்பட்டு ஊராட்சியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு, அங்கு அலுவலகம் மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதன் அருகிலேயே ஐடி பார்க் செயல்பட்டு வருகிறது.

இந்த அலுவலகங்களுக்கு திருவெறும்பூரிலிருந்து பர்மா காலனி வழியாக புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் கரையோரத்தில் உள்ள சாலை வழியாக 2 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும்.

இதன் காரணமாக அண்ணா நகர், போலீஸ் காலனி, சமத்துவபுரம், காமதேனு நகர், சிலோன் காலனி, பாரதியார் நகர், ஐ.டி. பார்க், போலீஸ் அகாடமி, அண்ணாமலை நகர் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் இந்த முக்கிய சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

மேலும், குண்டூர், கும்பக்குடி, மாத்தூர், விமான நிலையம், திருச்சி ரயில்வே ஜங்ஷன் உள்ளிட்ட பகுதிகளுக்கு இப்பகுதி மக்கள் செல்லும் இணைப்புச் சாலையாகவும் உள்ளது.

இந்த சாலை கடந்த இரு மாதங்களுக்கு மேலாக மிகவும் சேதமடைந்த நிலையில், குண்டும், குழியுமாக உள்ளது. நவல்பட்டு ஊராட்சி சார்பில் அவ்வப்போது பள்ளங்களில் மண் நிரப்பி சீர்படுத்தினாலும், மழை பெய்தால், அந்த மண் கரைந்து மீண்டும் பள்ளமாகி விடுகிறது.

சாலை மிகவும் சேதமடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதனால் தினந்தோறும் பலர் கீழே விழுந்து காயமடையும் சூழலும் நிலவுகிறது. எனவே, இந்த சாலையை விரைந்து சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x