Published : 31 Jul 2021 03:12 AM
Last Updated : 31 Jul 2021 03:12 AM

டேனிஷ் சித்திக்கை கொடூரமாக கொன்ற தலிபான்கள் : அமெரிக்க புலனாய்வு இதழில் பரபரப்பு தகவல்

இந்தியாவைச் சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 2018-ம் ஆண்டு புலிட்சர் விருது பெற்றவர்.

ஆப்கானிஸ்தானில் பணிபுரிந்து வந்த டேனிஷ் சித்திக் கடந்த 16-ம் தேதி, காந்தஹாரில் தலிபான் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடைபெறும் மோதல் குறித்த புகைப்படம் எடுக்க சென்றார். அப்போது, அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

இந்நிலையில், தலிபான் தாக்குதலை புகைப்படம் எடுக்க பாதுகாப்புப் படையினருடன் 'ஸ்பின் போல்டாக்' நகருக்கு டேனிஷ் காரில் சென்றிருக்கிறார். அப்போது,அவர்களின் கார் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அவருடன் இருந்த பாதுகாப்புப் படையினர் தப்பிச் சென்றுள்ளனர். வெறும் 3 கமாண்டோ வீரர்களுடன் நின்றிருந்த டேனிஷ் சித்திக் மீது அங்கிருந்த தலிபான் தீவிரவாதி ஒருவர் கையெறி குண்டை வீசியிருக்கிறார். இதில் பலத்த காயமடைந்த அவரை, அங்கிருந்த பொதுமக்கள் மீட்டுஅருகில் இருந்த மசூதிக்கு கொண்டுசென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டிருக்கிறது.

இதையடுத்து, அந்த மசூதிக்குள் நுழைந்த தலிபான் தீவிரவாதிகள், டேனிஷ் சித்திக்கை கொடூரமான முறையில் கொலை செய்தனர். பின்னர், அவரது உடலையும் சிதைத்ததாக அமெரிக்காவின் ‘வாஷிங்டன் எக்ஸாமினர்' இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவலர் கொலை

காந்தஹார் பகுதியில் காவலராக பணியாற்றி வந்தவர் ஃபாசஸ்முகமது. இவர் சமூக வலைதளங்களில் அடிக்கடி நகைச்சுவையாக பேசி வீடியோ பதிவிட்டு வந்தார். இதனால் ஆப்கானிஸ்தான் முழுவதும் இவர் பிரபலமாகி இருந்தார்.

இந்நிலையில், கடந்த வாரம் பணிமுடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ஃபாசல் முகமதுவை, தலிபான்கள் கடத்திச் சென்றனர். அப்போது அவரை தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அவரை தேடும் பணியில் ராணுவத்தினரும், போலீஸாரும் ஈடுபட்டிருந்தனர்.

இந்த சூழலில், ஃபாசல் முகமதுவை தாங்கள் கொலை செய்து விட்டதாக தலிபான்கள் நேற்று அறிவித்தனர். தலிபான்களுக்கு எதிரான பல தாக்குதல் சம்பவங்களில் ஃபாசல் முகமது ஈடுபட்டதால் அவரை கொலை செய்ததாகவும் தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x