Published : 31 Jul 2021 03:12 AM
Last Updated : 31 Jul 2021 03:12 AM

மகளிர் குத்துச் சண்டையில் அரை இறுதிக்கு தகுதி; ஒலிம்பிக்கில் 2-வது பதக்கத்தை உறுதி செய்தார் லோவ்லினா: பாட்மிண்டனில் சிந்து அரை இறுதிக்கு முன்னேற்றம்

டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் திருவிழாவின் 8-வது நாளான நேற்று குத்துச் சண்டையில் மகளிருக்கான 69 கிலோ எடைப் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் லோவ்லினா போர்கோஹெய்ன் 4-1 என்ற கணக்கில் முன்னாள் உலக சாம்பியனான சீன தைபேவின் நியென்-சின் செனை வீழ்த்தி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார். லோவ்லினா அரை இறுதிக்கு முன்னேறியதால் குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கம் பெறுவது உறுதியாகி உள்ளது.

அடுத்த சுற்றில் 4-ம் தேதி உலக சாம்பியனான துருக்கியின் புசெனாஸ் சுர்மெனெலியை லோவ்லினா எதிர்கொள்கிறார்.

பாட்மிண்டனில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் இந்தியாவின் பி.வி.சிந்து 21-13, 22-20 என்ற நேர் செட்டில் ஜப்பானின் அகானே யமகுச்சியை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார். அரை இறுதியில் சிந்து, சீன தைபேவின் தை சூ-யிங்கை எதிர்கொள்கிறார். மகளிருக்கான வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரி கால் இறுதி சுற்றில் தோல்வியடைந்தார்.

மகளிருக்கான ஹாக்கியில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தியது. 4 ஆட்டங்களில் விளையாடி உள்ள இந்திய அணிக்கு இது முதல் வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் கால் இறுதி சுற்றுக்கான வாய்ப்பில் இந்திய அணி நீடிக்கிறது.

குத்துச்சண்டையில் மகளிருக் கான 60 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சிம்ரன்ஜித் கவுர் 0-5 என்ற கணக்கில் தாய்லாந்தின் சுதாபார்ன் சீசோண்டியிடம் தோல்வியடைந்தார். மகளிருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் டூட்டி சந்த், ஆடவருக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் எம்பி ஜபிர், ஆடவருக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீப்பிள்சேஸில் அவினாஷ் சேபிள் ஆகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தனர். துப்பாக்கி சுடுதலில் மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மனு பாகர், ரஹி சர்னோபாத் ஆகியோர் பதக்க சுற்றுக்கு தகுதி பெறத் தவறினர்.

4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ரேவதி வீரமணி, சுபா வெங்கடேஷன், அலெக்ஸ் அந்தோணி, சர்தக் பாம்ப்ரி ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி ஹீட்ஸில் 3:19.93 நிமிடங்களில் இலக்கை எட்டி 8-வது இடம் பிடித்து இறுதிச் சுற்று வாய்ப்பை இழந்தது.

ஆடவர் ஹாக்கி அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் 5-3 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது. குர்ஜாந்த் சிங் இரு கோல், ஹர்மான்பிரீத் சிங், ஷம்ஷீர் சிங், நீலகண்ட சர்மா ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x