Published : 31 Jul 2021 03:12 AM
Last Updated : 31 Jul 2021 03:12 AM

நகரங்களில் அதிகளவில் மக்கள் தொடர்ந்து கூடும் பகுதிகள் மூடப்படும் - தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளின்றி ஆக.9 வரை ஊரடங்கு நீட்டிப்பு : விதிமுறைகளை தீவிரமாக கண்காணிக்க ஆட்சியர்கள், காவல்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் இன்றி வரும் ஆக.9-ம் தேதி வரைஊரடங்கை நீட்டித்து அறிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின்,வழிகாட்டு விதிமுறைகளை தீவிரமாகக் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு ஜூலை 31 (இன்று) காலை 6 மணியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், மாநிலத்தின் சில பகுதிகளில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து கண்காணித்து, கட்டுப்படுத்துவது குறித்து, தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்கள், அண்டை மாநிலங்களில்தொற்றின் தாக்கம், மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி, ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் தவிர கூடுதலாக எவ்வித தளர்வுகளும் இன்றிஜூலை 31 (இன்று) முதல் வரும்ஆகஸ்ட் 9-ம் தேதி காலை 6 மணிவரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.

கடந்த சில வாரங்களாக தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், நகரங்களின் குறிப்பிட்ட சில பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடுவதும், அதனால் தொற்று அபாயம் ஏற்பட்டு வருவதும் குறித்து விவாதிக்கப்பட்டது. மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்றநோக்கில் வழங்கப்பட்ட தளர்வுகள்சரிவர பின்பற்றப்படா விட்டால் அதன் விளைவுகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடுமையாக நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், சில குறிப்பிட்ட பகுதிகளில் அதிகளவில் கூட்டம் சேருவது தொடர்ந்து காணப்பட்டால் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள், காவல்துறையினர் அப்பகுதியை மூடும் நடவடிக்கைகளை பொதுமக்கள் நலன் கருதி முடிவெடுக்கலாம்.

மேலும், அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து கடைகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். குறிப்பாக கைகழுவும் திரவங்கள் வைத்தல், உடல் வெப்பநிலை பரிசோதித்தல், பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் முகக் கவசம் அணிவது, காற்றோட்ட வசதி, தனி மனித இடைவெளியைப் பின்பற்ற, ஒரே நேரத்தில் அதிகமான நபர்களை அனுமதிப்பதை தவிர்த்தல் உள்ளிட்டவற்றை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.

இந்த விதிமுறைகளை பின்பற்றாமலும், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் வாடிக்கையாளர்களை அனுமதித்தும் செயல்படும் வணிக, இதர நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

நோய்த் தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை, தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிதல், தடுப்பூசிசெலுத்துதல் ஆகியவை கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். வரையறுக்கப்பட்ட நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரமாகப் பின்பற்றப்பட வேண்டும். இப்பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதிக்கப்பட வேண்டும். நோய்த் தொற்று பரவலை வீடு வீடாகக் கண்காணிக்க குழுக்கள் அமைக்க வேண்டும்.

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த, பொதுமக்கள் அவசியமின்றி வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும். 3-ம் அலை என்ற ஒன்று தமிழகத்தில் ஏற்படவே முடியாத வகையில் நாம் ஒவ்வொருவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

பொது இடங்களில் முகக் கவசம்அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு, கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வதைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். நோய் அறிகுறி தென்பட்டால் மருத்துவமனைகளுக்குச் சென்று ஆலோசனை, சிகிச்சை பெற வேண்டும். மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, கரோனா தொற்றை முற்றிலும் அகற்ற உதவ வேண்டும்.

இவ்வாறு முதல்வர் அறிவித் துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x