Last Updated : 31 Jul, 2021 03:13 AM

 

Published : 31 Jul 2021 03:13 AM
Last Updated : 31 Jul 2021 03:13 AM

உச்ச நீதிமன்றம் அளித்த அனுமதி இன்றுடன் முடிவடைவதால் - ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தம் : நீட்டிப்பு கோரிய மனு மீது ஆக. 6-ல் விசாரணை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு மேலும்6 மாதம் அனுமதி அளிக்கக் கோரிவேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனு, ஆக. 6-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், ஏற்கெனவே அளிக்கப்பட்ட அனுமதி இன்றுடன் முடிவடைவதால், ஸ்டெர்லைட் நிறுவனம்ஆக்சிஜன் உற்பத்தியை நேற்றுடன் நிறுத்திக் கொண்டது.

நாட்டில் கடந்த ஏப்ரல் மாதத்தில் கரோனா தொற்று 2-வது அலையின் தாக்கம் உச்சத்தில் இருந்தது. தினமும் லட்சக்கணக்கானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். நாடு முழுவதும் மருத்துவ ஆக்சிஜனுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இக்கட்டான இவ்வேளையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்து இலவசமாக வழங்க வேதாந்தா நிறுவனம் முன்வந்தது. இது தொடர்பாக, அந்நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் 3 மாதங்களுக்கு மட்டும் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி அளித்து ஏப். 27-ம் தேதி உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை இயக்க அனுமதி அளித்து தமிழகஅரசு ஏப்.29-ம் தேதி அரசாணை வெளியிட்டது. மே 13-ம் தேதி தொடங்கி இதுவரை ஸ்டெர்லைட் ஆலையில் 2,132 டன் திரவ ஆக்சிஜனும், 11.19 டன் வாயு நிலை ஆக்சிஜனும் உற்பத்தி செய்யப்பட்டு, 32 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தில் மனு

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு உச்ச நீதிமன்றம் அளித்த அனுமதி ஜூலை 31-ம் தேதி (இன்று) முடிவடைகிறது. கரோனா பாதிப்பு இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. 3-வது அலை எச்சரிக்கையும் உள்ளது. எனவே, ஆக்சிஜன் உற்பத்திக்கான அனுமதியை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என, வேதாந்தா நிறுவனம் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எம்.ஆர்.ஷாஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே,`கரோனா பாதிப்பு முழுமையாக நீங்காததால் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கான அனுமதியை நீட்டிக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்தார்.

இதற்கு தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் எதிர்ப்பு தெரிவித்தார். `தமிழகத்தில் போதுமான ஆக்சிஜன் இருப்பு உள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை. எனவே, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன்உற்பத்தியை நீட்டிக்க வேண்டியது இல்லை’ என அவர் வாதிட்டார்.

இதையடுத்து, `இந்த வழக்கு வரும் ஆக. 6-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்’ எனக் கூறி விசாரணையை அன்றைய தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

இந்நிலையில், ஆக்சிஜன் உற்பத்திக்கு உச்ச நீதிமன்றம் அளித்த அனுமதி இன்றுடன் (ஜூலை 31) முடிவடைவதால், ஸ்டெர்லைட் நிறுவனம் ஆக்சிஜன் உற்பத்தியை நேற்றோடு நிறுத்திக் கொண்டது. இது தொடர்பாக அந்நிறுவனம் சார்பில் நேற்று மாலை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்.27-ம் தேதி அளித்த அனுமதி இன்றுடன் (ஜூலை 31)முடிவடைகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஆலையின் அனைத்து இயக்கங்களும் இன்று முழுமையாக முடிவுக்கு வரும் வகையில், ஆக்சிஜன் உற்பத்தி நேற்றோடு நிறுத்தப்பட்டுள்ளது. இதுவரை 2,132 மெட்ரிக் டன் மருத்துவப் பயன்பாட்டுக்கான திரவ ஆக்சிஜனை தமிழகத்தின் 32 மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்துள்ளோம். மேலும் எங்கள் ஆலை வளாகத்தில் 134 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் இருப்பில் உள்ளது.

ஆக்சிஜன் உற்பத்திக்கான அனுமதியை மேலும் 6 மாதம் நீட்டிக்கக் கோரி நாங்கள் தாக்கல் செய்த மனு வரும் 6-ம் தேதிஉச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்குவரவுள்ளது. ஆக்சிஜன் உற்பத்தியை தொடர உச்ச நீதிமன்றத்தில் உத்தரவை எதிர்நோக்கியுள்ளோம்.

மின்சாரம் வேண்டும்

ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை தயார் நிலையில் வைத்திருக்கவும், இருப்பில் உள்ள திரவ ஆக்சிஜனை அனுப்பி வைக்கவும் மின்சாரம் தேவை. எனவே, 2 மெகாவாட் மின்சாரத்தை தொடர்ந்து ஆலைக்கு வழங்க தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும்.

நாட்டின் இக்கட்டான நிலையில் மக்களுக்கு உதவி செய்ய எங்களுக்கு ஒத்துழைப்பு அளித்த நீதிமன்றம், மத்திய, மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகத்துக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். உச்ச நீதிமன்றம் எந்த நேரத்தில் உத்தரவிட்டாலும் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x