Published : 30 Jul 2021 03:14 AM
Last Updated : 30 Jul 2021 03:14 AM

மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் - ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு : பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவீதம்இந்த ஆண்டு முதல் அமல்படுத்த மத்திய அரசு ஒப்புதல்

மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடும், பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக் கீடும் இந்த ஆண்டு முதல் அமல் படுத்தப்படும் என்று மத்திய சுகா தாரத் துறை அமைச்சகம் அறி வித்துள்ளது.

நாடு முழுவதும் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் செயல்படும் மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவப் படிப்பு, மருத்துவ மேற்படிப்பு, பல் மருத்துவ படிப்பு, மருத்துவ பட்டய படிப்புகளுக்கான இடங்களில் குறிப்பிட்ட சதவீதம் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படுகிறது. இதன்படி, மருத்துவ இளநிலை படிப்புகளில் 15 சதவீத இடங்களையும், மருத்துவ முதுநிலை படிப்புகளில் 50 சதவீத இடங்களையும் அகில இந்திய தொகுப்புக்கு மாநில அரசுகள் அளித்து வருகின்றன.

மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு மட்டுமே இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. அந்த இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. தமிழகத்திலும் இந்த கோரிக்கை வலுவாக எழுந்தது. இதுதொடர்பாக திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, நிலுவையில் உள்ளது.

மத்திய அமைச்சர்கள் வலியுறுத்தல்

இதனிடையே, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் பூபேந்திர யாதவ், ஆர்.சி.பி.சிங், அனுபிரியா படேல் மற்றும் எம்.பி.க்கள் சிலர், பிரதமர் நரேந்திர மோடியை அண்மையில் சந்தித்து பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு கோரிக்கையை முன்வைத்தனர். இந்த பின்னணியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஜூலை 26-ம் தேதி உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒடதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது, நீண்ட காலம் நீடிக்கும் இந்தப் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணும்படி சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பிரதமர் உத்தரவிட்டார்.

அவரது வழிகாட்டுதலின்படி, மத்திய சுகாதார, குடும்ப நலத்துறை வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்திருக்கிறது. அதன்படி, மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு (ஓபிசி) நடப்பு 2021-21 கல்வி ஆண்டில் 27 சதவீத இடஒதுக்கீடும், பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு (இடபிள்யூஎஸ்) 10 சதவீத இடஒதுக்கீடும் அமல்படுத்தப்படும்.

இதன்மூலம் இளநிலை மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த 1,500 மாணவர்களும், பொருளாதரத்தில் நலிந்த பொதுப்பிரிவைச் சேர்ந்த 550 மாணவர்களும் பயன்பெறுவர். முதுநிலை மருத்துவப் படிப்பில் 2,500 ஓபிசி மாணவர்களும், 1,000 இடபிள்யூஎஸ் மாணவர்களும் பலன் அடைவர். இந்த இடஒதுக்கீடு மூலம் ஒட்டுமொத்தமாக 5,550 மாணவர்களுக்கு பலன் கிடைக்கும்.

கடந்த 2014-ம் ஆண்டில் நாடு முழுவதும் எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை 54,348 ஆக இருந்தது. கடந்த 2020-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை 84,649 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் 56 சதவீத இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதேபோல கடந்த 2014-ம் ஆண்டில் 30,191 ஆக இருந்த முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்களின் எண்ணிக்கை, 2020-ம் ஆண்டு நிலவரப்படி 54,275 இடங்களாக உயர்ந்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் 80 சதவீத இடங்கள் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் புதிதாக 179 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 558 ஆக அதிகரித்துள்ளது. அரசு சார்பில் 289, தனியார் சார்பில் 269 மருத்துவக் கல்லூரிகள் செயல்படுகின்றன.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி பாராட்டு

பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:

நடப்பு கல்வியாண்டு முதல் இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு திட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதம், பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. இதன்மூலம் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அரசின் முடிவு நாட்டின் சமூக நீதிக்கு புதிய முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x