Published : 30 Jul 2021 03:14 AM
Last Updated : 30 Jul 2021 03:14 AM

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் - இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு :

பெகாசஸ் உளவு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 19-ம் தேதிதொடங்கியது. இந்தக் கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவுபார்த்ததாக வெளியான செய்தியை முன்வைத்து எதிர்க்கட்சிகள்அமளியில் ஈடுபட்டு வருகின்றன.இதனால் அவை நடவடிக்கைகள்முற்றிலுமாக முடங்கியுள்ளன. இருந்தபோதிலும், இரு அவைகளிலும் சில மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில், பெகாசஸ் உளவு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் என நேற்று முன்தினம் நடந்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இந்நிலையில், மக்களவை நேற்று காலை கூடியதும் பெகாசஸ் விவகாரம், புதிய வேளாண் சட்டங்கள், எரிபொருள் விலை உயர்வு ஆகிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோஷமிட்டன. அப்போது அவைத் தலைவர் ஓம் பிர்லா, "மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதித்து விட்டு இந்த விவகாரங்கள் குறித்து பேசலாம்" எனக் கூறினார்.

இதனை ஏற்காத எதிர்க்கட்சிகள், அவையின் மையப்பகுதிக்கு சென்று அமளியில் ஈடுபட்டனர். இதனால் பிற்பகல் 11 மணி வரை அவை ஒத்தி வைக்கப்படுவதாக ஓம் பிர்லா அறிவித்தார்.

பின்னர், 11 மணிக்கு அவைகூடியபோதும், இதே பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் முழக்கமிட்டனர். மேலும், மத்திய அரசை விமர்சிக்கும் வகையிலான பதாகைகளையும் அவர்கள் கையில் ஏந்தி கோஷமிட்டனர். தொடர் அமளி காரணமாக கூச்சல், குழப்பம் ஏற்பட்டதால் அவை அடுத்தடுத்து இருமுறை ஒத்தி வைக்கப்பட்டு, பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

முன்னதாக, இந்த அமளிக்கு மத்தியிலும் விமான நிலையங்கள் பொருளாதார முறைப்படுத்துதல் ஆணைய சட்டத்திருத்த மசோதா, உள்நாட்டு கப்பல்கள் மசோதா ஆகியவை மக்களவையில் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டன.

மாநிலங்களவையில்...

மாநிலங்களவையிலும் பெகாசஸ் உளவு விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

சபாநாயகர் ஓம் பிர்லா வேதனை

பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பாக நேற்று காலை மக்களவை கூடியபோதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது, சபாநாயகர் ஓம் பிர்லா கூறுகையில், ‘‘நாடாளுமன்ற நெறிமுறைகளுக்கு மாறாக அமளியில் ஈடுபடும் எம்.பி.க்களின் நடவடிக்கை அதிருப்தி அளிக்கிறது. புதன்கிழமையன்று சில எம்.பி.க்கள் நடந்து கொண்ட விதத்தால் வேதனை அடைந்தேன்’’ என்று தெரிவித்தார்.

இதனிடையே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திநேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘‘நமது ஜனநாயகத்தின் அடித்தளமே மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் செயல்பட்டு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை விவாதிப்பதுதான். ஆனால், எம்.பி.க்களை தங்கள் பணியை செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அனுமதிப்பதில்லை. பணவீக்கம், விவசாயிகள் பிரச்சினை, பெகாசஸ்ஒட்டுகேட்பு விவகாரம் போன்ற பிரச்சினைகள் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x