Published : 30 Jul 2021 03:15 AM
Last Updated : 30 Jul 2021 03:15 AM

முன்னோடி வங்கி சார்பில் - நடப்பாண்டில் ரூ.9,417 கோடி கடன் வழங்க இலக்கு : சேலம் மாவட்ட ஆட்சியர் தகவல்

சேலம் மாவட்ட முன்னோடி வங்கி (இந்தியன் வங்கி) சார்பில் 2021-22-ம் நிதியாண்டில் ரூ.9,417.67 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வங்கியாளர்கள் கூட்டம் நடந்தது.

கூட்டத்தில், சேலம் மாவட்ட முன்னோடி வங்கி (இந்தியன் வங்கி) சார்பில் 2021-22-ம் நிதியாண்டுக்கான வங்கிக் கடன் திட்ட அறிக்கையை சேலம் ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:

சேலம் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் 2021-22-ம் நிதியாண்டுக்கு ரூ.9,417.67 கோடி அனைத்து வங்கிகளின் சார்பில் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை (2020-21) விட 12 சதவீதம் கூடுதலாகும். இக்கடன் தொகையில் முன்னுரிமை கடனாக (விவசாயம், தொழில்துறை, சேவைத்துறை உள்ளிட்டவைகளுக்கு) ரூ.7,610.37 கோடி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

விவசாயத்துக்கான (பயிர்க் கடன், சுய உதவிக்குழுக்கடன், விவசாயம் சார்ந்த தொழில் களுக்கான கடன்) வங்கிக் கடன் ரூ.5,735.31 கோடியாக இலக்கு (75.36 சதவீதம்) உள்ளது. சிறு, குறு மற்றும் மத்திய தொழில்களுக்கு ரூ.875.55 கோடியாக இலக்கு (11.50 சதவீதம்) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதர முன்னுரிமை கடனாக ரூ.999.15 கோடியாக (13.13 சதவீதம்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மொத்த கடன்களில் வணிக வங்கிகளின் மூலம் 82.73 சதவீதமும், கூட்டுறவு வங்கிகளின் மூலம் 13.61 சதவீதமும், கிராம ஊரக வங்கிகள் மூலம் 3.34 சதவீதமும், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம் சார்பில் 0.32 சதவீதமும் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வங்கியாளர்கள் கடன் வழங்குவதில் கல்வி கடனுக்கு முன்னுரிமை கொடுத்து கிராமப்புற ஏழை மாணவ, மாணவியர்களும் கல்வி கற்க உதவிட வேண்டும். வேளாண் பெருமக்களுக்கு கடனுதவி வழங்குவதற்கும் முன்னுரிமை கொடுத்திட வேண்டும். தொழில் வளர்ச்சியைப் பெருக்க தேவையான கடன்களை தொழில் முனைவோர்களுக்கு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் செல்வம், இந்தியன் வங்கி மண்டல மேலாளர் பி.உன்னி கிருஷ்ணன் நாயர், கனரா வங்கி மண்டல மேலாளர் யசோதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x