Published : 29 Jul 2021 03:12 AM
Last Updated : 29 Jul 2021 03:12 AM

காஷ்மீரில் அதிகாலை திடீர் மேக வெடிப்பால்மழை வெள்ளத்தில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு : 40-க்கும் மேற்பட்டோர் மாயம்

காஷ்மீரில் மேக வெடிப்பு ஏற்பட்டு பெருமழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டதில் உறங்கி கொண்டிருந்த 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 40-க்கும் மேற்பட்டோர் காணவில்லை.

காஷ்மீரின் பூஞ்ச், ரஜவுரி, ரீஸி மற்றும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கிஸ்துவார் மாவட்டம் டச்சன் மலைப் பகுதிகளில் உள்ள ஹான்சார் கிராமத்தில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு திடீரென பெரு மழை கொட்டியது.

இதுபோல் திடீரென பெரு மழை பெய்வதை மேக வெடிப்பு (கிளவுட்பர்ஸ்ட்) என்கின்றனர். இதனால் வெள்ளம் ஏற்பட்டு கிராமப் பகுதிகளை சூழ்ந்தது. அப்போது உறக்கத்தில் இருந்த கிராம மக்கள் பீதியில் எழுந்து பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர்.

இதற்கிடையில் மழை வெள்ளத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர்.மேலும், 40-க்கும் மேற்பட்டோர்வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். பலர் காணவில்லை என்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. படுகாயம் அடைந்த 12 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், காஷ்மீரில் மழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் மக்கள் பயத்தில் உள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி கள் கூறும்போது, ‘‘ஜம்மு காஷ்மீர் போலீஸ் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, ராணுவம் உட்பட பல மீட்புக் குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், அந்த கிராமப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது’’ என்றனர்.

மேக வெடிப்பால் பாதிக்கப்பட்ட கிராமப் பகுதிகளில் சாலைவசதி, மொபைல் போன் வசதிகள்இல்லை. அதனால், மீட்புப் படையினர் அந்தப் பகுதியை சென்றடைவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

லடாக் யூனியன் பிரதேசத்தில் கார்கில் மலைப் பகுதிகளிலும் மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது. கார்கில் - லே நெடுஞ்சாலை பகுதியில் உள்ள கங்கிரால் என்ற கிராமத்தில் முதல் மேகவெடிப்பு ஏற்பட்டு பெரு மழை கொட்டியது. இந்தப் பகுதி கார்கிலில் இருந்து 60 கி.மீ. தூரத்தில் உள்ளது. அதன்பின், சங்க்ரா என்ற பகுதியில்2-வது மேக வெடிப்பு ஏற்பட்டது.

இதனால் அங்குள்ள நீர்மின் திட்ட கட்டுமானங்கள், வீடுகள் சேதம் அடைந்துள்ளன. எனினும்,அதிர்ஷ்டவசமாக அங்கு உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மற்றும் டிஜிபி ஆகியோருடன் மத்திய உள்துறைஅமைச்சர் அமித் ஷா தொலைபேசியில் தொடர்பு கொண்டு நேற்று ஆலோசனை நடத்தினார்.

மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றவும், அவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கவும் அமித் ஷா அப்போது கேட்டுக் கொண்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x