Published : 29 Jul 2021 03:13 AM
Last Updated : 29 Jul 2021 03:13 AM

அறுவடைக்கு முன்னால் - நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் தொடங்க வேண்டும் : வேளாண் துறை அமைச்சரிடம் விவசாயிகள் வலியுறுத்தல்

கோவை

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அறுவடைக்கு முன்னரே செயல்படுத்த வேண்டும் என வேளாண் துறை அமைச்சரிடம் விவசாயிகள் வலியுறுத்தினர்.

தமிழ்நாடு அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில், நடப்பு நிதியாண்டுக்கான (2021-22) தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வது தொடர்பான கருத்து கேட்புக் கூட்டம் கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக அரங்கில் நேற்று நடந்தது. கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று, தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர்.

இக்கூட்டத்தில் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் கூறியதாவது: நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அறுவடைக்கு முன்னரே தொடங்க வேண்டும். அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.

பயிர் இழப்புகளால் ஏற்படும் நஷ்டத்தை விவசாயிகள் சரி செய்ய, தனிநபர் பயிர்க் காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பாண்டியாறு - புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இதனால் 11 மாவட்டங்களில் விவசாயத்துக்கு தேவையான பாசன வசதி கிடைத்து, விளைபொருள் உற்பத்தி அதிகரிக்கும். கோவை, திருப்பூர் தென்னை சாகுபடியில் முக்கிய மாவட்டங்களாகும். தென்னை நல வாரியத்தை இம்மாவட்டங்களை மையப்படுத்தி அமைக்க வேண்டும். ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

ஈரோட்டில் மஞ்சள் நல வாரியம் அமைத்து, மஞ்சள் ஏற்றுமதியை மேம்படுத்த வேண்டும். வனவிலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் இழப்புகளைத் தடுக்க, மத்திய அரசின் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தை திருத்தியமைக்க வேண்டும். உழவர் சந்தைகளை மேம்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான உரங்கள், விதைகள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயப் பொருட்களை சந்தைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேயிலை உற்பத்தியை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பின்னர், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசும்போது, ‘‘வேளாண் துறைக்கு முதல் முறையாக தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதுதொடர்பாகவும், அதன் முக்கியத்துவம் குறித்தும் விவசாயிகள் தங்கள் கருத்துகளை உழவன் செயலி மூலம் பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு குறுவைத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்ய அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும். விவசாயிகளுக்கு இலவசமாக விதைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழகத்தை பசுமையாக்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துகள் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். முதல்வர் 10 ஆண்டுக்கான தொலைநோக்கு திட்டத்தை வைத்துள்ளார். அதன் மூலம் வேளாண்துறை முதன்மைத் துறையாக மாற்றப்படும்,’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் அரசு செயலர் சி.சமயமூர்த்தி, இயக்குநர்கள் ஆ.அண்ணாதுரை (வேளாண்மை), ஆர்.பிருந்தாதேவி (தோட்டக்கலை), வேளாண் விற்பனைத்துறை ஆணையர் வள்ளலார், வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் என்.குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x