Published : 29 Jul 2021 03:13 AM
Last Updated : 29 Jul 2021 03:13 AM

புதுச்சேரியில் 75 ஆயிரம் மரக்கன்றுகள் நட ஆலோசனை :

75- வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தையொட்டி புதுச்சேரியில் 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு அரசு திட்டமிட்டிருக்கிறது. துணைநிலை ஆளுநர் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், அதற்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று துணைநிலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தலைமைச் செயலர் அஸ்வனி குமார் பல்வேறு துறை செயலர்கள் மற்றும் இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், புதுச்சேரி முழுவதும் 75 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பதற்காக வேளாண் செயலர் தலைமையில் 75 பொறுப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும். மரக்கன்றுகள் நடுவதற்கான இடங்கள் அல்லது பகுதிகள், மர வகைகள், எண்ணிக்கை ஆகியவற்றை திட்டமிட வேண்டும். மரக்கன்றுகள் நடுவதற்கான இடங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். ஏரிகுளம் போன்ற நீராதாரங்களை அடையாளப்படுத்த வேண்டும்.சாலை ஓரங்களில், கட்டிடங்களைச் சேதப்படுத்தாத மர வகைகளை அதிகம் நட வேண்டும். கல்வி நிறுவனங்கள், கோயில் வளாகங்கள், தொழிற் சாலைகள், சாலையோரங்களில் மரக்கன்றுகளை நட்டு பாதுகாக்கலாம்.

நீண்ட நாட்கள் பலன் தரக்கூடிய நிழல் மரங்கள், பழ மரங்கள், பூச்செடிகள் வகைகளைத் தேர்ந்தெடுத்து நட வேண்டும். பாரம்பரியமாக அந்தந்தப் பகுதியில் மண்வளத்துக்கேற்ப வளரக்கூடிய மரக் கன்றுகளை நடவேண்டும். நகரப் பகுதியில் மரங்கள் நடுவது, புதுச்சேரியை பசுமை நகரமாக மாற்றும் ஒரு நல்ல முயற்சியாக அமையும். முதல்வர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என்று அனைத்து தரப்பினரும் இணைந்து பசுமைப் புதுச்சேரியை உருவாக்க வேண்டும். அரசு-சாரா நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களைத் தனியார் பங்களிப்பு திட்டத்தின் கீழ் ஈடுபடுத்தலாம்.

சுய உதவிக் குழுக்களை மரங்கள் நட்டு வளர்க்க ஊக்கப்படுத்தி, மரம் நடும் பணியில் அவர்களை ஈடுபடுத்தலாம். மியாவாக்கி குறுங்காடுகள் உருவாக்க கவனம் செலுத்தலாம். அதற்கான இடங்களையும் தேர்வு செய்ய வேண்டும்போன்ற ஆலோசனைகளை ஆளுநர் தமிழிசை வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x