Published : 28 Jul 2021 03:15 AM
Last Updated : 28 Jul 2021 03:15 AM

குத்துச்சண்டையில் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார் லோவ்லினா :

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான குத்துச்சண்டையில் இந்தியாவின் லோவ்லினா கால் இறுதிக்கு முன்னேறினார்.

ஜப்பானில் நடைபெற்று வரும் 32-வது ஒலிம்பிக் திருவிழாவின் 5-வது நாளான நேற்று மகளிருக்கான 69 கிலோ எடைப் பிரிவு குத்துச்சண்டையில் இந்தியாவின் லோவ்லினா போர்கோஹெய்ன் 3-2 என்ற கணக்கில் ஜெர்மனியின் நாடின் அபெட்ஸை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். வரும் 30-ம் தேதி சீன தைபேவின் நியென்-சின் செனுடன் மோதுகிறார் லோவ்லினா.

ஆடவருக்கான பாய்மரப்படகில் 4, 5, 6-வது சுற்றில் இந்தியாவின் விஷ்ணு சரவணன் முறையே 23, 22, 12-வது இடங்களை பிடித்தார்.மகளிர் பிரிவில் நேத்ரா குமணன் 5 மற்றும் 6-வது சுற்றில் முறையே 32, 38-வது இடத்தை பிடித்தார். ஆடவருக்கான ஸ்கீப் பிரிவில் இந்தியாவின் கணபதி, வருண் தாக்குர் ஜோடி முதல் சுற்றில் 18-வது இடம் பிடித்தது.

பாட்மிண்டனில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஷிராக் ஷெட்டி, சாட்விக்சாய்ராஜ் ராங்கி ரெட்டி ஜோடி தங்களது 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்தின் பென் லேன், சீயன் வெண்டி ஜோடியை தோற்கடித்தது. எனினும் இந்திய ஜோடி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

டேபிள் டென்னிஸில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சரத் கமல் 3-வது சுற்றில் சீனாவின் மா லாங்கிடம் தோல்வியடைந்தார். இத்துடன் டேபிள் டென்னிஸில் இந்திய அணியின் பதக்க கனவு முடிவுக்கு வந்தது.

ஆடவர் ஹாக்கியில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது. இந்திய அணி சார்பில் 14-வது நிமிடத்தில் சிம்ரன்ஜித் சிங்கும், 15-வது மற்றும் 51-வது நிமிடங்களில் ரூபிந்தர் பால் சிங்கும் கோல் அடித்தனர். இந்திய அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x