Published : 28 Jul 2021 03:15 AM
Last Updated : 28 Jul 2021 03:15 AM

ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற - மீராபாய் சானுவுக்கு ரூ.2 கோடி பரிசு, பதவி உயர்வு : ரயில்வே அமைச்சர் அறிவிப்பு; மணிப்பூரில் மக்கள் உற்சாக வரவேற்பு

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான 49 கிலோ எடைப் பிரிவு பளுதூக்குதலில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தார். பதக்கம் வென்ற அவர் நேற்றுமுன்தினம் தாயகம் திரும்பினார்.

அவருக்கு டெல்லி விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர் உள்ளிட்ட பல்வேறு துறை அமைச்சர்கள் மீராபாய் சானுவுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த வகையில் ரயில்வே ஊழியரான மீராபாய் சானுவை அத்துறையின் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்ததற்காக மீராபாய் சானுவுக்கு ரூ.2 கோடிபரிசும், பதவி உயர்வும் வழங்கப்படும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது ட்விட்டர் பதிவில், “இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்த ரயில்வே வீராங்கனை மீராபாய்சானுவை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அவரை கவுரப்படுத்தும் விதமாக ரூ.2 கோடி பரிசு வழங்கப்படும்.பதவி உயர்வும் வழங்கப்படும். அவரின் திறமை, கடின உழைப்பு, மன உறுதி ஆகியவற்றால் உலகில் கோடிக்கணக்கான மக்களுக்கு உந்து சக்தியாக திகழ்ந்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக வெள்ளிப் பதக்கம்வென்று மணிப்பூர் மாநிலத்துக்கு பெருமை சேர்த்த மீராபாய் சானுவுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் என்.பிரேன் சிங் அறிவித்தார். மேலும்காவல் துறையில் கூடுதல் கண்காணிப்பாளராக பணி ஆணை வழங்கப்படும். எனவே அவர், ரயில்வேதுறையில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு மாநில காவல் துறையில் இணைய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இதற்கிடையே, மீராபாய் சானுபங்கேற்ற பிரிவில் தங்கப் பதக்கம்வென்ற சீனாவின் ஜிஹுய் ஹூக்கு ஊக்க மருந்து சோதனை நடத்த உலக ஊக்க மருந்து தடுப்பு முகமைமுடிவு செய்துள்ளது. ஜிஹுய் ஹூ,சோதனையில் வெற்றி பெறத் தவறினால் விதிமுறையின் படி வெள்ளிப்பதக்கம் வென்ற இந்தியாவின் மீராபாய் சானுவின் பதக்கம் தங்கமாக தரநிலை உயர்த்தப்படும்.

இந்நிலையில் மீராபாய் சானு நேற்று மணிப்பூர் திரும்பினார். இம்பாலில் உள்ள விமான நிலையத்தில் அவருக்கு மாநில முதல்வர் பிரேன் சிங் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து, மணிப்பூர்மாநில அரசு சார்பில் மீராபாய் சானுவுக்கு பாராட்டுவிழா நடத்தப்பட்டது. விழாவில் ரூ.1 கோடிக்கான காசோலையும், காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் பதவிக்கானஆணையையும் முதல்வர் வழங்கினார். மீராபாய் சானுவை வரவேற்க ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x