Published : 28 Jul 2021 03:15 AM
Last Updated : 28 Jul 2021 03:15 AM

நாடாளுமன்றத்தில் அவை நடவடிக்கைகளை தடுக்கும் - எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குறித்து மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் : பாஜக எம்.பி.க்களிடம் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நாடாளுமன்றத்தை சீர்குலைக்கும் வகையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நடந்து கொள்ளும் முறையை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் வலியுறுத்தினார்.

டெல்லியில் பாஜக எம்.பி.க்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை வகித்து பேசினார்.

கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது குறித்து மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் செய்தியாளர்களிடம் விளக்கினார். கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

பாஜக எம்.பி.க்கள் அனைவரும் ஆகஸ்ட் 15-ம் தேதி தங்கள் தொகுதிகளுக்குச் செல்ல வேண்டும். அவர்கள் தங்கள் பகுதியில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும். அந்த விழாவை அரசு விழாவாக அல்லாமல், மக்கள் விழாவாக நடத்த வேண்டும்.

இந்தக் கூட்டங்களின்போது நாடாளுமன்றத்தை சீர்குலைக்கும் வகையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நடந்துகொள்ளும் முறையை எம்.பி.க்கள் மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

எந்த விஷயத்தைப் பற்றி வேண்டுமானாலும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயாராக இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் அவை நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நடந்து கொள்கின்றனர். அதன் காரணமாக அடிக்கடி அவைகளை ஒத்திவைக்க நேரிடுகிறது. இதனால் நாடாளுமன்றத்தின் பொன்னான நேரம் வீணாகிறது. இதுதொடர்பாக மக்களிடம் பாஜக எம்.பி.க்கள் எடுத்துச் சொல்ல வேண்டும்.

கரோனா வைரஸ் தொற்று மற்றும் அதற்கான தடுப்பூசி விநியோகம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை அரசு நடத்தியது. அந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி கலந்து கொள்ளவில்லை. ஆனால் அவர்கள் இப்போது அவைநடவடிக்கைகளில் குறுக்கிட்டு குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த உண்மைகளை மக்களுக்கு பாஜக எம்.பி.க்கள் மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்.

இதைத் தொடர்ந்து பாஜக எம்.பி.க்கள் தங்கள் தொகுதியின் கீழ் வரும் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் 2 உறுப்பினர் கொண்ட குழுவை உருவாக்க வேண்டும். அந்த குழு சட்டப் பேரவைத் தொகுதியில் விழாக்களை நடத்த வேண்டும்.

நாட்டின் நூறாவது சுதந்திர தினம் கொண்டாடப்படும்போது அதாவது 2047-ம் ஆண்டில் இந்தியா எப்படி அமைய வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்று மக்களிடம் கருத்துகளை கேட்கும் பணியை இந்தக் குழு செய்ய வேண்டும்.

இந்த குழுக்களுடன் எம்.பி.க்களும் குறைந்தது ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதியிலும் 75 கிராமங்களுக்கு செல்ல வேண்டும். அங்கு 75 மணி நேரமாவது அவர்கள் செலவிட வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x