Published : 26 Jul 2021 03:12 AM
Last Updated : 26 Jul 2021 03:12 AM

பாமக நிறுவனர் ராமதாஸின் 83-வது பிறந்த நாள் - மோடி, அமித்ஷா, ஸ்டாலின், பழனிசாமி வாழ்த்து :

பாமக நிறுவனர் ராமதாஸின் 83-வது பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஏழைகளுக்கு உணவு அளித்தல், கட்சிக் கொடியேற்றி இனிப்பு வழங்குதல், மாணவர்களுக்கு பரிசு வழங்குதல் என பாமகவினர் நேற்று ராமதாஸ் பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாடினர்.

நேற்று காலை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் ராமதாஸை தொடர்புகொண்டு, பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். அவரதுஉடல் நலம் குறித்து விசாரித்த பிரதமர், டெல்லிக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தொலைபேசியில் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் வாழ்த்துதெரிவித்தார். அதை ஏற்றுக்கொண்ட ராமதாஸ், "உங்கள் தந்தைகருணாநிதி என்னுடன் நெருக்கமான நட்பு கொண்டிருந்தார். என்னைத் தவிர பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காகப் போராட வேறு யாரும் இல்லை என்று அனைவரிடமும் கூறுவார். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்களுக்காக பல திட்டங்களை அவர் செயல்படுத்தினார். உங்கள் தந்தையின் அந்த இடத்தை நீங்கள் பிடிக்க வேண்டும்" என வாழ்த்தினார். அதற்கு முதல்வரும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பதிவில், "இட ஒதுக்கீடுஉள்ளிட்ட உரிமைகளுக்காகப் போராடி வரும் ராமதாஸ் நீண்ட காலம் நலமுடன் வாழ வாழ்த்து கிறேன்" என தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மற்றும் புதுவை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தொலைபேசியில் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிதொலைபேசியில் தொடர்புகொண்டு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்து, எல்லா நலமும், வளமும் பெற்று தொடர்ந்து மக்களுக்கான அரசியல் தொண்டாற்ற வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

பாஜக தமிழக தலைவர் கே.அண்ணாமலை ட்விட்டர் பதிவில், "காட்சிக்கு எளியவர். மனதால் வலியவர். எளியோரின் மருத்துவர். இளைஞர்களுக்கு வழிகாட்டும் பண்பாளர். தமிழக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மூத்தவர். நம் மருத்துவர் ராமதாஸ் பிறந்த நாளில்வணங்குகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல, மதிமுக பொதுச்செயலர் வைகோ, புதுவை சட்டப்பேரவைத் தலைவர் ஏம்பலம்செல்வம், அதிமுக ஒருங்கிணைப் பாளர் ஓ.பன்னீர்செல்வம், தமிழககாங்கிரஸ் முன்னாள் தலைவர் மு.கிருஷ்ணசாமி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி, மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி பீடம் கோ.ப.செந்தில், இதய சிகிச்சை நிபுணர் செங்கோட்டுவேலு முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி,சி.விஜயபாஸ்கர் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x