Published : 26 Jul 2021 03:12 AM
Last Updated : 26 Jul 2021 03:12 AM

தனியார் மருத்துவமனைகளில் இலவச கரோனா தடுப்பூசி திட்டம் - சென்னையில் வரும் 28-ம் தேதிமுதல்வர் தொடங்கிவைக்கிறார் : சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை சைதாப்பேட்டையில் திமுக சார்பில் 5,300 பேருக்கு தலா ரூ.1,100 மதிப்பிலான மளிகைப் பொருட்கள் மற்றும் ஹாட்பாக்ஸ் ஆகியவற்றை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தற்போது கரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதால், திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

அதிமுக அரசு விலை குறைவான, தரமற்ற முகக்கவசங்கள் வாங்கி மக்களுக்கு அளித்தார்கள். அவற்றால் எந்த உபயோகமும் இல்லை. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ரூ.5 கோடி நிதி

தொழில் நிறுவனங்களின் பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதி(சிஎஸ்ஆர்) மூலம், தனியார் மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசிபோட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை ரூ.5 கோடிக்கும் அதிகமான நிதி கிடைத்துள்ளது.

இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில்தான் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. வரும் 28-ம் தேதி காலை சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத் துவமனையில் இத்திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்.

இதேபோல, தமிழகம் முழுவதும் சிஎஸ்ஆர் நிதி மூலம் தனியார் மருத்துவமனைகளில் இலவச கரோனா தடுப்பூசி திட்டம் 29-ம் தேதி தொடங்க உள்ளது.

மக்களைத் தேடி மருத்துவம்

தமிழகத்தில் விரைவில் `மக்களைத் தேடி மருத்துவம்' திட்டம்தொடங்கப்பட உள்ளது. கேரளா,ஆந்திரா, கர்நாடகாவில் இருந்துதமிழகம் வருவோருக்கு பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வு தொடர்பாக, அரசாணை 293, அரசாணை 354 ஆகிய இரண்டில் எது வேண்டுமென அவர்கள் முடிவு செய்ய செய்தபின், அந்த திட்டம் நிறைவேற்றப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x