Published : 25 Jul 2021 03:13 AM
Last Updated : 25 Jul 2021 03:13 AM

உலகின் மிகப்பெரிய குடும்பத்தைச் சேர்ந்த 12 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று : மருத்துவமனையில் அனுமதி

உலகின் மிகப்பெரிய குடும்பத்துக்குச் சொந்தக்காரர் என்று அழைக்கப்படுபவரின் வீட்டில் உள்ள 12 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜியோனா சனா பாவ்ல். 75 வயதாகும் இவர்தான் உலகிலேயே மிகப் பெரிய குடும்பத்தின் தலைவராக உள்ளார்.

இவரது வீடு அழகிய மிசோரம் மாநிலத்தின் இந்திய-வங்கதேச எல்லையிலுள்ள செர்ச்சிப் மாவட்டத்தில் உள்ள பக்தாங் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. ஜியோனா சனாவுக்கு மொத்தம் 39 மனைவிகள், 94 குழந்தைகள். 14 மருமகள்கள், 33க்கும் மேற்பட்ட பேரன், பேத்திகள் உள்ளனர்.

சுமார் 180 குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட இந்த குடும்பம் பக்தாங் கிராமத்தில் 4 மாடிகளைக் கொண்ட "சுவான் தார் ரன்" என்று அழைக்கப்படும் மிகப் பெரிய வீட்டில் வசிக்கிறது. மிகப்பெரிய குடும்பத்துக்குச் சொந்தக்காரர் என்று அழைக்கப்பட்டு ஜியோனா சனா கடந்த ஜூன் 13-ம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அப்போது அவருக்கு வயது 76.

இந்நிலையில் ஜியோனா சனாவின் வீட்டில் உள்ள 12 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. சுவான் தார் கிராமம், லாங்நுவாம் கிராமம் ஆகியவற்றை சுற்றி அமைந்துள்ள பகுதிகளில் பலருக்கு அண்மையில் கரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. மொத்தம் 2,224 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், இதில் 80 பேருக்கு கரோனா வைரஸ் ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் மிசோரம் சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அந்த 80 பேரில் 12 பேர் ஜியோனா சனா வீட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இதைத் தொடர்ந்து அந்த வீட்டைச் சேர்ந்த மேலும 163 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட 12 பேரில் ஜியோனாவின் முதல் மனைவியின் முதல் மகன் நுன்பர்லியானாவுக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. 61 வயதாகும் நுன்பர்லியானாவுக்கு 2 மனைவிகள், 15 குழந்தைகள் உள்ளனர். அவர்தான் தற்போது அந்த குடும்பத்தின் தலைவராகச் செயல்பட்டு வருகிறார்.

இதையடுத்து அந்த குடும்பத்தைத் தனிமைப்படுத்தும் பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தொற்று ஏற்பட்ட 12 பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மிசோரம் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30,492-ஆக உள்ளது. இதில் தற்போது 7,559 பேர் கரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதம் உள்ளவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

உலகின் மிகப்பெரிய குடும்பம் என்று அழைக்கப்படும் வீட்டில் உள்ளவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது அப்பகுதியில் உள்ளவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x