Published : 25 Jul 2021 03:13 AM
Last Updated : 25 Jul 2021 03:13 AM

நாட்டின் எதிர்கால பொருளாதார சூழல் அச்சுறுத்தலாக உள்ளது : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கவலை

புதுடெல்லி

நாட்டின் எதிர்கால பொருளாதார சூழல் அச்சுறுத்தலாக உள்ளது. பொதுமக்களின் தேவைகளுக்கு ஏற்ப முன்னுரிமைகளை மாற்றி அமைக்க வேண்டியது கட்டாயம் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டார்.

இந்தியாவில் தாராளமய பொருளாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதை ஒட்டி நடைபெற்ற கருத்தரங்கில், தாராள பொருளாதார சிந்தனையை நாட்டில் அமல்படுத்திய மன்மோகன் சிங் சில கருத்துகளை வெளியிட்டுள்ளார். அதில் தற்போது ஏற்பட்டுள்ள சில சிக்கலான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் தலைமையிலான அரசில் நிதி அமைச்சராக பொறுப்பேற்று தாராளமயமாக்கல் கொள்கையை இந்தியாவில் அமல்படுத்தியவர் மன்மோகன் சிங். 1991-ம் ஆண்டில் இந்தியாவில் காணப்பட்ட பொருளாதார சூழலைவிட தற்போதைய நிலை மிகவும் அச்சுறுத்தலாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இந்திய மக்களின் நலனுக்கு ஏற்பவும், அனைவரும் கண்ணியமான வாழ்க்கையை வாழ தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டார்.

30 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1991-ம் ஆண்டில் இந்திய பொருளாதாரத்தில் உரிய மாற்றங்களைச் செய்ய வேண்டிய கட்டாயம் காங்கிரஸ் அரசுக்கு இருந்தது, அதனடிப்படையில் புதிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுக்கப்பட்டது என்று சிங் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 30 ஆண்டுகளில் அடுத்தடுத்து வந்த அரசுகள் இந்த பொருளாதார கொள்கையை தொடர்ந்து முன்னெடுத்து சென்றுள்ளன. இதன் மூலம் மிகப் பெரிய வளர்ந்துவரும் பொருளாதார நாடாக இந்தியா முன்னேறியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நமது வளர்ச்சியைக் கொண்டாட வேண்டிய தருணம் இதுவல்ல என்றும், அனைத்து தரப்பு மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு இதில் உரிய மாற்றங்களைச் செய்ய வேண்டியது அவசியம் என்று சுட்டிக் காட்டியுள்ளார். 1991-ம் ஆண்டில் இருந்த சூழலை விட தற்போது உள்ள நிலையைக் கருத்தில் கொண்டு அனைத்து மக்களின் சுகாதார நலன் மற்றும் கண்ணியமான வாழ்க்கைக்கான உத்திரவாதத்துக்கு ஏற்ப கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டியது அவசியம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவில் முதல் முறையாக பொருளாதார சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்பட்ட காலகட்டத்தில் தான் முக்கிய பொறுப்பில் இருந்தது மிகவும் அதிர்ஷ்டமான விஷயமாகக் கருதுவதாகக் குறிப்பிட்ட சிங், தற்போது கரோனா பரவலால் நாட்டின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டினார். கடந்த 30 ஆண்டுகளில் நாம் பெற்ற வளர்ச்சியைக் கண்டு நாம் மிகவும் பெருமைப்பட்டுக்கொள்ளலாம் என்று சுட்டிக்காட்டிய அவர், தற்போது கரோனாவால் ஏற்பட்டுள்ள பின்னடைவு தனக்கு மிகவும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார். இதனால் பல ஆயிரக்கணக்கான இந்தியர்கள் உயிரிழந்த சோகமும் தன்னை மிகவும் கவலையடையச் செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். பொருளாதார சுணக்கத்தினால் நமது சுகாதாரம் மற்றும் கல்வித்துறைகள் பின்னடைவை சந்திக்க அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

1991-ம் ஆண்டு நிதி அமைச்சராக இருந்தபோது தாக்கல் செய்த பட்ஜெட் உரையில் விக்டர் ஹியூகோ-வின் தொலைநோக்கு வாசகமான, ``இந்த உலகில் அவரவருக்கான தருணங்கள் வரும்போது அதைத் தடுக்க யாராலும் முடியாது,’’ என்பதைக் குறிப்பிட்டிருந்தேன். 30 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தற்போது எனக்கு ராபர்ட் பிராஸ்ட்- கவிதையில் குறிப்பிட்டிருந்த ``எனக்கு நிறைய பொறுப்புகள் உள்ளன. அதை நிறைவேற்ற நிறைய தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. நான் உறங்குவதற்கு முன் அதை நிறைவேற்றுவேன்'’ என்ற அந்த வரிகள்தான் தனக்கு நினைவுக்கு வருவதாக மன்மோகன் சிங் குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x