Published : 25 Jul 2021 03:13 AM
Last Updated : 25 Jul 2021 03:13 AM

டோக்கியோ ஒலிம்பிக் திருவிழா - துப்பாக்கி சுடுதல், வில்வித்தையில் இந்தியாவுக்கு ஏமாற்றம் : ஆடவர் ஹாக்கியில் வெற்றி தொடக்கம்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் 2-வது நாளான நேற்று துப்பாக்கி சுடுதல், வில்வித்தை, டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவு ஆகியவற்றில் இந்திய வீரர்கள் ஏமாற்றம் அளித்தனர்.

டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் திருவிழாவின் 2-வது நாளான நேற்று துப்பாக்கி சுடுதலில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் இந்தியாவின் இளவேனில் வாளறிவன், அபூர்வி சண்டிலா ஆகியோர் பதக்க சுற்றுக்கு முன்னேறத் தவறினர். உலகத் தரவரிசையில் முதலிடம் வகித்த வாளறிவன் தகுதி சுற்றில் 626.5 புள்ளிகள் சேர்த்து 16-வது இடத்தையே பிடித்தார். அதேவேளையில் அபூர்வி சண்டிலா 621.9 புள்ளிகளுடன் 36-வது இடம் பிடித்தார். தகுதி சுற்றில் முதல் 8 இடங்களை பிடிப்பவர்கள் மட்டுமே இறுதி சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் அந்த வாய்ப்பை வாளறிவன், அபூர்வி சண்டிலா இழந்தனர்.

நார்வே நாட்டின் ஜீனெட் ஹெக் டூஸ்டாட் 632.9 புள்ளிகள் குவித்து முதலிடம் பிடித்து தகுதி சுற்றில் ஒலிம்பிக் சாதனையை முறிடித்தார். இறுதி சுற்றில் சீனாவின் கியான் யாங் 251.8 புள்ளிகள் குவித்து ஒலிம்பிக் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கில் முதல் தங்கத்தை வென்ற வீராங்கனை என்ற பெருமையை கியான் யாங் பெற்றார். ரஷ்யாவின் அனஸ்டசியா கலாஷினா 251.1 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றார். கடைசி சுற்றுக்கு முன்பு வரை காலாஷினா 0.2 புள்ளிகள் முன்னிலையுடனே இருந்தார்.

ஆனால் கடைசி சுற்றில் கியான் யாங் 9.8 புள்ளிகள் குவித்து அசத்தினார். அதேவேளையில் காலாஷினா 8.9 புள்ளிகள் மட்டுமே சேர்த்தார். இதனாலேயே அவர், தங்கப் பதக்கத்தை தவறவிட்டார். சுவிட்சர்லாந்தின் நினா கிறிஸ்டென் 230.6 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். தகுதி சுற்றில் முதலிடம் பிடித்த நார்வே நாட்டின் ஜீனெட் ஹெக் டூஸ்டாட் இறுதி சுற்றில் 4-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார்.

ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் உலகின் முதல் நிலை வீரரான இந்தியாவின் சவுரப் சவுத்ரி தகுதி சுற்றில் 586 புள்ளிகள் குவித்து முதலிடம் பிடித்தார். மற்றொரு இந்திய வீரரான அபிஷேக் வர்மா 575 புள்ளிகள் சேர்த்து 17-வது இடத்தை பிடித்து இறுதி சுற்றுக்கு தகுதிபெறத் தவறினார். இறுதி சுற்றில் சவுரப் சவுத்ரி 137.4 புள்ளிகள் மட்டுமே எடுத்து 7-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார்.

41 வயதான ஈரானின் ஜாவேத் ஃபோருகி 244.8 புள்ளிகள் குவித்து ஒலிம்பிக் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் ஒலிம்பிக்கில் அதிக வயதில் பதக்கம் வென்ற வீரர் என்ற சாதனையை படைத்தார் ஃபோருகி. இதற்கு முன்னர் 1956-ம் ஆண்டு மெல்பர்ன் ஒலிம்பிக்கில் பளுதூக்குதலில் ஈரானின் மஹ்மூத் நமட்ஜூ 38 வயதில் பதக்கம் வென்றிருந்தார். செர்பியாவின் தமிர் மிகெக் 237.9 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், சீனாவின் பாங் வெயி 217.6 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.

வில்வித்தை

வில்வித்தையில் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி, பிரவீன் ஜாதவ் ஜோடி, சீன தைபேவின் லின் சியா, டாங் சி-சுன் ஜோடியை எதிர்கொண்டது. இதில் இந்திய ஜோடி தொடக்கத்தில் 1-3 என பின்தங்கியிருந்தது. ஆனால் அதன் பின்னர் துடிப்புடன் செயல்பட்ட தீபிகா குமாரி, பிரவீன் ஜாதவ் ஜோடி இறுதியில் 5-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது. ஆனால் கால் இறுதி சுற்றில் தீபிகா குமாரி, பிரவீன் ஜாதவ் ஜோடி தென் கொரியாவின் ஆன் சான் மற்றும் கிம் ஜே தியோக் ஜோடியிடம் 2-6 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

படகு வலித்தல்

ஆடவருக்கான படகு வலித்தலில் இலகுரக இரட்டை ஸ்கல்ஸில் இந்தியாவின் அர்ஜுன் லால் ஜாட், அரவிந்த் சிங் ஜோடி அரை இறுதிக்கு முன்னேறத் தவறியது.

ஹாக்கியில் வெற்றி

ஆடவர் ஹாக்கியில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்தை எதிர்த்து விளையாடியது. இதில் இந்திய 3 -2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணிசார்பில் ஹர்மான்பிரீத் 2 கோல்களையும், ரூபிந்தர்பால் சிங் ஒரு கோலும் அடித்தனர். இறுதிக்கட்ட நிமிடங்களில் கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ், நியூஸிலாந்து அணியின் கோல் அடிக்கும் வாய்ப்புகளை தகர்த்தெறிந்தார். இது வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

ஜூடோ

மகளிருக்கான ஜூடோ 48 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சுஷிலா தேவி லிக்மாபாம் 0-10 என்ற கணக்கில் ஹங்கேரியின் ஈவா செர்சனோவிஸ்கியிடம் தோல்வியடைந்தார்.

சரத், மணிகா ஏமாற்றம்

டேபிள் டென்னிஸில் கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சரத் கமல், மணிகா பத்ரா ஜோடி, சீன தைபேவின் யுன் ஜு லின் மற்றும் செங் ஐ சிங் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் சரத் கமல், மணிகா பத்ரா ஜோடி 8-11, 6-11, 5-11, 4-11 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது. எனினும் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் மணிகா பத்ரா 2-வது சுற்றுக்கு முன்னேறினார். அவர் தனது முதல் சுற்றில் 11-7, 11-6, 12-10, 11-9 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தின் டின் டின் ஹோவை வீழ்த்தினார்.

மற்றொரு இந்திய வீராங்கனையான சுதிர்தா முகர்ஜி தனது முதல் சுற்றில் 5-11, 11-9, 11-1, 11-9, 11-3, 11-9, 11-5 என்ற செட் கணக்கில் சுவீடனின் லிண்டா பெர்க்ஸ்ட்ரோமை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

சுமித் நாகல் முன்னேற்றம்

ஆடவருக்கான டென்னிஸ் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல் 6-4, 6-7, 6-4 என்ற செட் கணக்கில் உஸ்பெகிஸ்தானின் டெனிஸ் இஸ்தோமினை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

சாய்பிரணீத் தோல்வி

ஆடவருக்கான பாட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சாய் பிரணீத் முதல் சுற்றில், இஸ்ரேலின் மிஷா ஜில்பர்மானை எதிர்த்து விளையாடினார். இதில் சாய் பிரணீத் 17-21, 15-21 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தார். அதேவேளையில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஷிராக் ஷெட்டி, சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி ஜோடி 2-வது சுற்றுக்கு முன்னேறியது. ஷிராக் ஷெட்டி, சாட்விக் சாய்ராஜ் ஜோடி தங்களது முதல் சுற்றில் 21-16, 16-21, 27-25 என்ற செட் கணக்கில் சீன தைபேவின் லீ யங், வாங் சி லின் ஜோடியை வீழ்த்தியது.

விகாஷ் கிருஷ்ணன் தோல்வி

ஆடவருக்கான குத்துச்சண்டையில் வெல்டர்வெயிட் பிரிவில் இந்தியாவின் விகாஷ் கிருஷ்ணன் ஜப்பானின் மென்சா ஒகாசாவை எதிர்கொண்டார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய மென்சா ஒகாசாவா 5-0 என்ற கணக்கில் விகாஷ் கிருஷ்ணனை வீழ்த்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x