Published : 25 Jul 2021 03:13 AM
Last Updated : 25 Jul 2021 03:13 AM

தமிழகத்தில் மழைநீர் சேமிப்புக்கான - தடுப்பணைகள், புதிய நீர்நிலைகளை உருவாக்க வேண்டும் : அமைச்சர், அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை

மழைநீரை முழுமையாக பயன்படுத்தும் வகையில் தமிழகத்தில்அணைகள் இல்லாத மாவட்டங்களில் நீர்சேமிப்புக்கான தடுப்பணைகள் மற்றும் புதிய நீர்நிலைகளை உருவாக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழக அரசின் முழுமையான நிதிநிலை அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்காகதுறைகள் தோறும் ஆய்வுக் கூட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, நீர்வளத் துறையின் செயல்பாடுகள், திட்டப் பணிகள், புதிய திட்டங்கள் குறித்து நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, மாநில நிதியில் காவிரி டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறப்பு தூர்வாரும் பணிகள், அத்திக்கடவு - அவிநாசி நீர்ப்பாசன திட்டம், மேட்டூர் சரபெங்கா நீரேற்று திட்டம், காட்டூர்- தத்தமஞ்சு ஏரிகளின் கொள்ளளவை மேம்படுத்தி நீர்த்தேக்கம் அமைக்கும் திட்டம், விழுப்புரம் கழுவேலி ஏரி, செங்கல்பட்டு கொளவாய் ஏரிகளை மீட்கும் திட்டம் குறித்து ஆய்வு செய்தார். நபார்டு உதவியுடன் புதிய தடுப்பணைகள் கட்டுதல், அணைக்கட்டுகள், நீர்நிலைகள், ஏரிகள் புனரமைப்பு குறித்தும் ஆய்வு செய்தார்.

உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டம், அணைகள் புனரமைப்பு மேம்பாட்டுத் திட்டம், காவிரி- குண்டாறு, தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்பு திட்டங்களின் முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்தும் ஆய்வு செய்தார்.

அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதாவது:

தமிழகம் முழுவதும் நீர்நிலைகளை புனரமைத்து, தூர்வாரி, நீரின் கொள்ளளவை அதிகப்படுத்தநடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய நீர்நிலைகளை உருவாக்கவும், மழை மூலம் கிடைக்கும் நீரைமுழுமையாக சேமித்து பயன்படுத்தவும் அணைகள் இல்லாத மாவட்டங்களில் புதிய நீர் சேமிப்பு கட்டுமானங்களை குறிப்பாக தடுப்பணைகளை உருவாக்க வேண்டும்.

மேலும், விவசாயிகள் நலன் கருதி பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாத நீர்நிலைகளை செப்பனிட வேண்டும். புதிய நீர்நிலைகளை உருவாக்க வேண்டும். கால்வாய்களை சரி செய்ய முன்னுரிமை அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆய்வுக் கூட்டத்தில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, பொதுப்பணித் துறை செயலர் சந்தீப் சக்சேனா, நிதித் துறை செயலர் ச.கிருஷ்ணன், பொதுப்பணித் துறை சிறப்பு செயலர் டி.ரவீந்திரபாபு, நீர்வளத் துறை தலைமை பொறியாளர் கு.ராமமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x