Published : 25 Jul 2021 03:13 AM
Last Updated : 25 Jul 2021 03:13 AM

2 லட்சம் போலி துப்பாக்கி உரிமம் வழங்கிய விவகாரம் - ஜம்மு-காஷ்மீர், டெல்லியில் 40 இடங்களில் சிபிஐ சோதனை :

ஜம்மு-காஷ்மீரில் சுமார் 2 லட்சம் போலி துப்பாக்கி உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக காஷ்மீர், டெல்லியில் 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.

இந்தியாவில் அதிக துப்பாக்கி உரி மங்கள் வழங்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் உத்தர பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீர் 2-வது இடத்தில் உள்ளது. கடந்த 2012 முதல் 2016 வரையிலான காலத்தில் மட்டும் காஷ்மீரில் 4.49 லட்சம் துப்பாக்கி உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த 2017-ம் ஆண்டில் ராஜஸ்தான் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் நடத்திய விசாரணையில் காஷ்மீரில் இருந்து சுமார் 3,000 பேர் போலி துப்பாக்கி உரிமங்கள் பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி சிபிஐயிடம் வழக்கு விசாரணை ஒப்படைக்கப்பட்டது.

இதில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் ஜம்மு-காஷ்மீரில் சுமார் 2 லட்சம் போலி துப்பாக்கி உரிமங்கள் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது காஷ்மீர் மட்டுமன்றி ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட வெளி மாநிலங்களை சேர்ந்தோரும் காஷ்மீர் அரசிடம் இருந்து துப்பாக்கி உரிமம் பெற்றிருப்பது அம்பலமானது.

இந்த வழக்கு தொடர்பாக கடந்த 2019 டிசம்பரில் காஷ்மீரில் 12-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. அப்போது மூத்த அதிகாரிகளுக்கு மோசடி யில் தொடர்பிருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 2020-ம் ஆண்டில் ஐஏஎஸ் அதிகாரி ராஜீவ் ரஞ்சன் உட்பட 2 மூத்த அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். முறைகேடாக துப்பாக்கி உரிமம் வழங்கியதற்கு பிரதிபலனாக 2 அதிகாரிகளும் பெரும் தொகையை லஞ்சமாக பெற்றது தெரியவந்தது.

இந்த பின்னணியில் இவ்வழக்கு தொடர்பாக காஷ்மீர், டெல்லியில் 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். ஜம்மு, நகர், உதம்பூர், ராஜோரி, அனந்தநாக், பாரமுல்லா மற்றும் டெல்லியில் முக்கிய அரசு அலுவலகங்கள், அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடைபெற்றது.

குறிப்பாக காஷ்மீரைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் ஷாகித் இக்பால் சவுத்ரி, நீரஜ் குமார் ஆகியோரின் வீடுகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது.

இதுதொடர்பாக ஷாகித் இக்பால் சவுத்ரி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘கடந்த 4 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடைபெற்று பெறுகிறது. எனது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். எனது பதவிக் காலத்தில் வழங்கப்பட்ட துப்பாக்கி உரிமங்கள் குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன்’ என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x