Published : 25 Jul 2021 03:13 AM
Last Updated : 25 Jul 2021 03:13 AM

சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் சுரங்கப் பணிகள் - செயற்கை மணல் தயாரிப்பு, விற்பனைக்கு புதிய கொள்கை : அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதிக்காமல் சுரங்கப் பணிகளை மேற்கொள்ள நிலையான சுரங்கக் கொள்கை, செயற்கை மணல் தயாரிப்பு மற்றும் விற்பனையை ஒழுங்குபடுத்த புதிய கொள்கை ஆகியவற்றை உருவாக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

தலைமைச் செயலகத்தில் புவியியல் மற்றும் சுரங்கத் துறை, தமிழ்நாடு கனிம நிறுவனம், தமிழ்நாடு மேக்னசைட் நிறுவன செயல்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் வழங்கிய அறிவுறுத்தல்கள்:

சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் பாதிக்கப்படாமல் சுரங்கப் பணிகளை மேற்கொள்வது குறித்தநிலையான சுரங்கக் கொள்கை, செயற்கை மணல் தயாரிப்பு மற்றும் விற்பனையை ஒழுங்குமுறைப்படுத்த புதிய கொள்கை ஆகியவற்றை உருவாக்க வேண்டும். கனிம வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பயன்பாட்டில் உள்ள குவாரிகளை கண்டறிந்து, வாய்ப்பு உள்ள இடங்களில் அவற்றை மழைநீர் சேகரிப்பு அமைப்புகளாக மாற்றி, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு பாதிப்பு விளைவிக்கும் பயனற்ற கல்குவாரிகளை மறுசீரமைப்பு செய்து, பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2 கோடி ஆண்டு பழைய படிமம்

விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை கிராமத்தில் உள்ள 2 கோடி ஆண்டுகள் பழமைவாய்ந்த கல்மரப் படிமங்கள் மற்றும் திருச்சி,பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் உள்ள தொல்லுயிர் படிமங்கள் ஆகியவற்றை பாதுகாத்து, யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் சேர்க்க உரியநடவடிக்கை எடுக்க வேண்டும்.

மின்னணு சேவை முறை

புவியியல் மற்றும் சுரங்கத் துறையில் குத்தகை விண்ணப்பம் பெறுவதில் தொடங்கி, குவாரி குத்தகை உரிமம் மற்றும் நடைச்சீட்டு வழங்கும் வரை சுரங்க நிர்வாகத்தில் மின்னணு சேவை முறையை ஏற்படுத்த விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு கனிம நிறுவனம்,அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.250கோடி அளவுக்கு வருவாயைஉயர்த்த முயற்சி எடுக்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் கிடைக்கும் கிராஃபைட்டில் இருந்துஅதிக செறிவூட்டப்பட்ட உயர்தர கிராஃபைட் தயாரிக்க உரிய தொழில்நுட்பத்தை கண்டறிய வேண்டும்.

அரக்கோணம் அருகே செயற்கை மணல் தயாரிக்க புதிய உற்பத்திப் பிரிவு தொடங்க செயல்திட்டம் உருவாக்க வேண்டும்.

தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம், கூடுதல் சுரங்கப் பகுதிகளை அடுத்த 3 ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். உலகத் தரம் வாய்ந்த ஆலோசகரை நியமித்து உற்பத்தித் திறனை அதிகரிக்க வேண்டும்.

இவ்வாறு முதல்வர் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, நிதித் துறை செயலர் ச.கிருஷ்ணன், தொழில் துறை செயலர் நா.முருகானந்தம், சிறப்புசெயலர் ரா.லில்லி, புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநர் இல.நிர்மல்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x