Published : 25 Jul 2021 03:14 AM
Last Updated : 25 Jul 2021 03:14 AM

வேலைவாய்ப்புக்கான - இணையதளங்கள் மூலம் நடைபெறும் மோசடிகள் : சைபர் கிரைம் காவல்துறையினர் எச்சரிக்கை

வேலை வாய்ப்புக்கான இணையதளங்களை பயன்படுத்தி மோசடிகள் நடப்பதால், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என காவல் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

கோவை மாநகர சைபர் கிரைம் பிரிவு காவல்துறையினர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘‘வேலைவாய்ப்புக்கான இணையதளங்களில் வேலை கேட்டு பதிவு செய்வோரை குறிவைத்து மோசடிகள் நடக்கின்றன. வேலைவாய்ப்புக்காக www.naukri.com போன்ற இணையதளங்களில் வேலை தேடுவோர், தங்களை பற்றிய முழு விவரங்களையும், அந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வைக்கின்றனர்.

அதை பார்வையிடும் மோசடி நபர்கள், பிரபல நிறுவனங்களில் இருந்து தொடர்பு கொள்வதாக பொய்யாக கூறி, வேலை தேடுவோரை தொடர்பு கொள்கின்றனர். பிரபல நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டு மேலாளர் பேசுவதாக கூறி, நேர்காணல் நடத்துவது போல நடித்து ஏமாற்றி, பதிவுக்கட்டணம், செயல்பாட்டுக் கட்டணம், சரிபார்ப்புக் கட்டணம் என பல வகைகளில் பணத்தை பெற்று மோசடி செய்து விடுகின்றனர்.

வேலை தரும் பெரும் நிறுவனங்கள், எந்தக் காரணம் கூறியும் தாங்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கும் நபர்களிடம் பணம் வசூலிப்பதில்லை. எனவே, பிரபல நிறுவனங்களில் இருந்து வேலை வாய்ப்புக்காக, உங்களைத் தொடர்பு கொண்டு பேசுவதாக கூறினால், அந்த நிறுவனங்களை முடிந்தவரையில் நேரடியாகவோ, நண்பர்கள் மூலமாகவோ தொடர்பு கொண்டு ஊர்ஜிதம் செய்து கொள்ள வேண்டும். இதுபோன்ற மோசடி நபர்களிடம் நம்பி ஏமாறாமல் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்’’ எனக் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x