Published : 25 Jul 2021 03:15 AM
Last Updated : 25 Jul 2021 03:15 AM

தருமபுரி-மொரப்பூர் இணைப்பு ரயில் பாதை திட்ட - அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.2.50 கோடி ஒதுக்கீடு : நிலம் அளவீட்டு பணிகளை ஆய்வு செய்த எம்பி தகவல்

மொரப்பூர் அடுத்த சென்னம்பட்டி பகுதியில் ரயில் பாதை திட்டத்துக்காக நிலம் அளவீடு செய்யும் பணி நேற்று நடந்தது. இப்பணியை தருமபுரி எம்பி செந்தில்குமார் ஆய்வு செய்தார்.

தருமபுரி

தருமபுரி-மொரப்பூர் இணைப்பு ரயில் பாதை திட்டத்தில் நிலம் அளவீடு உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தருமபுரி எம்பி செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

அரூர் வட்டம் மொரப்பூரில் இருந்து தருமபுரி வரையான சுமார் 30 கிமீ தூரத்துக்கு இணைப்பு ரயில் பாதை அமைத்தால், தருமபுரியில் இருந்து சென்னைக்கு நேரடி ரயில் போக்குவரத்துக்கு வாய்ப்பு ஏற்படும். எனவே, தருமபுரி-மொரப்பூர் இடையில் ரயில்பாதை அமைக்க வேண்டும் என தருமபுரி மாவட்ட மக்கள் மிக நீண்ட காலமாக மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் அப்போதைய மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் தருமபுரியில் நடந்த அரசு விழாவில், ரூ.358 கோடி மதிப்பில் மொரப்பூர்-தருமபுரி இணைப்பு ரயில் பாதைத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.அதன் பின்னர், ரயில் பாதை அமைக்க நில அளவீட்டு பணிகள் மொரப்பூரில் தொடங்கப்பட்டது. குறிப்பிட்ட தூரம் வரை நில அளவீட்டுப் பணிகள் முடிந்த நிலையில் அரசியல், கரோனா தொற்று உள்ளிட்ட பல்வேறு சூழல்களால் பணிகள் கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில், மொரப்பூர் அடுத்த சென்னம்பட்டி பகுதியில் நிலம் அளவீடு பணிகள் மீண்டும் நேற்று தொடங்கியது. இப்பணிகளை தருமபுரி எம்பி செந்தில்குமார் ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மொரப்பூர்-தருமபுரி இணைப்பு ரயில் பாதை திட்டப்பணிகள் தொடங்கப்பட்ட நிலையிலேயே கிடப்பில் போடப்பட்டது. இத்திட்டத்துக்கு தடையாக இருப்பது எது என ஆய்வு செய்தேன். திட்டத்துக்கு போதிய நிதியை மத்திய அரசு ஒதுக்காததே அளவீட்டுப் பணிகள் நிற்க காரணம் என தெரிந்தது.

இதையடுத்து, இத்துறை தொடர்பான அதிகாரிகளை சந்தித்து தொடர்ந்து திட்டப்பணிகளை தொடங்க வலியுறுத்தினேன். அதன் பயனாக நிலம் அளவீடு செய்யும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அளவீடு மற்றும் அத்தியாவசியப் பணிகளுக்காக ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திட்டப்பணிகள் விரைந்து முடிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x