Published : 24 Jul 2021 03:12 AM
Last Updated : 24 Jul 2021 03:12 AM

காஷ்மீரில் 5 கிலோ வெடிபொருட்களுடன் பறந்த - ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது :

காஷ்மீர் எல்லைப் பகுதியில் வெடிபொருட்களுடன் பறந்த ஆளில்லா விமானத்தை (ட்ரோன்) போலீஸார் சுட்டு வீழ்த்தினர். அதில் 5 கிலோ வெடிபொருட்கள் இருந்தன.

கடந்த ஜூன் 27-ம் தேதி காஷ்மீரின் ஜம்மு பகுதியில் உள்ள விமானப் படை தளத்தின் மீது ஆளில்லா விமானம் மூலம்2 வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இதில் 2 வீரர்கள் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து காஷ்மீர் முழுவதும் ஆளில்லா விமானங்களை கண்காணிக்கும் பணி தீவிரப் படுத்தப்பட்டிருக்கிறது.

கடந்த சில வாரங்களாக பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்திய எல்லைக்குள் ஆளில்லா விமானங்கள் நுழைவதும், இந்திய வீரர்கள் சுடும்போது மீண்டும் பாகிஸ்தான் எல்லைக்குள் மறைவதும் தொடர்கதையாக நடந்து வருகின்றன.

இந்த சூழலில் நேற்று அதிகாலை ஜம்முவின் கனாசக் எல்லைப் பகுதியில் ஆளில்லா விமானம் பறப்பதை அதிவிரைவு படை போலீஸார் கண்டுபிடித்தனர். அந்த ஆளில்லா விமானத்தை போலீஸார் சுட்டு வீழ்த்தினர். இதுகுறித்து ஜம்மு போலீஸ் ஏடிஜிபி முகேஷ் சிங் நிருபர்களிடம் கூறியதாவது:

பாகிஸ்தான் எல்லையிலிருந்து இந்திய எல்லைக்குள் நுழைந்த ஆளில்லா விமானத்தில் 5 கிலோ வெடிபொருட்கள் இருந்தன. காஷ்மீரில் பதுங்கியிருக்கும் தீவிர வாதிக்கு ஆளில்லா விமானம் மூலம் வெடிபொருட்கள் அனுப்பப் பட்டுள்ளது. அந்த தீவிரவாதி குறித்து விசாரணை நடக்கிறது.

சுட்டு வீழ்த்தப்பட்ட ஆளில்லா விமானம் 20 கி.மீ. தொலைவு வரை பறக்கும் திறன் உடையது. இதன் பாகங்கள் சீனா, ஹாங்காங் மற்றும் தைவானில் தயாரிக்கப்பட் டுள்ளன.

சுதந்திர தினத்தையொட்டி ஜெய்ஷ் தீவிரவாதிகள் மிகப் பெரிய தாக்குதல் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. எனவே மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறோம். குறிப்பாக ஆளில்லா விமான கண்காணிப்பை தீவிரப் படுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x