Published : 24 Jul 2021 03:12 AM
Last Updated : 24 Jul 2021 03:12 AM

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கோலாகல நிகழ்ச்சிகளுடன் - ஒலிம்பிக் திருவிழா தொடங்கியது : 205 நாடுகளைச் சேர்ந்த 11 ஆயிரம் வீரர்கள் பங்கேற்பு

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில்32-வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா, நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் 205 நாடுகளைச் சேர்ந்த 11 ஆயிரம் வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

தொடக்க விழாவில் இந்திய தேசியக் கொடியை குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், ஆடவர் ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் ஆகியோர் ஏந்திச் சென்றனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் 2020-ம்ஆண்டு நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கரோனா பெருந்தொற்று காரணமாக போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டன. ஓராண்டு தாமதத்துக்கு பிறகு டோக்கியோவில் ஒலிம்பிக் திருவிழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. அங்குள்ள தேசிய மைதானத்தில் வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் தொடக்க விழா நேற்று மாலை நடந்தது.

முதலில் போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் கொடி அணி வகுப்பு நடந்தது. முதல் அணியாக ஒலிம்பிக்கின் தாயகமான கிரீஸ் நாட்டு வீரர்கள், வீராங்கனைகள் தங்கள் நாட்டு கொடியை ஏந்திச் சென்றனர்.

இந்த வரிசையில் இந்தியா 21-வது நாடாக இடம் பெற்றிருந்தது. இந்தியா சார்பில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், ஆடவர் ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் ஆகியோர் தேசியக் கொடியை ஏந்திச் சென்றனர். இந்த அணிவகுப்பில் 20 இந்தியவீரர்கள், 6 அதிகாரிகள் பங்கேற்றனர்.

போட்டியை நடத்தும் நாடான ஜப்பானின் தேசியக் கொடி விழா மேடைக்கு எடுத்துவரப்பட்டது. தொடக்க விழாவில் வாணவேடிக்கை, ஒளிக்கற்றை ஜாலங்கள், கண்கவர் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. அதைத் தொடர்ந்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாச், அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அவர் கூறும்போது, ‘‘இன்று நம்பிக்கையின் நாள். இந்த தருணத்தை மகிழ்விப்போம். நாம் அனைவரும் இங்கு ஒன்றாக இருப்பதற்கு காரணம் ஜப்பான் நாட்டு மக்கள்தான். அவர்களுக்கு எங்களது பாராட்டுகளையும் ஆதரவையும் தெரிவிக்க விரும்புகிறோம்’’ என்றார்.

இதையடுத்து 32-வது ஒலிம்பிக் போட்டியை ஜப்பானின் பேரரசர் நருஹிடோ தொடங்கி வைத்தார். விழா மேடையில் ஒலிம்பிக் கீதம் இசைக்கப்பட்டு ஒலிம்பிக் கொடி ஏற்றப்பட்டது. இந்த கொடியை 5 கண்டங்களைச் சேர்ந்த தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் ஏந்தி வந்து, கரோனாவுக்கு எதிராக கடுமையாக உழைத்த டோக்கியோவைச் சேர்ந்த முன்களப் பணியாளர்களிடம் ஒப்படைத்திருந்தனர். அவர்களைக் கொண்டே கொடி ஏற்றப்பட்டது.

ஜப்பான் வீரர்களான யமகதா ரியோட்டா, இஷிகாவா கசுமி ஆகியோர் போட்டிக்கான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அவர்களுடன் 2 பயிற்சியாளர்கள், இரு நடுவர்களும் உறுதிமொழி ஏற்றனர்.

பின்னர், ஜூடோ மற்றும் மல்யுத்த ஒலிம்பிக் சாம்பியன்களான நோமுரா தடாஹிரோ, யோஷிடா சவோரி ஆகியோர் ஒலிம்பிக் ஜோதியை மைதானத்துக்குள் எடுத்து வந்தனர். அதை ஜப்பானிய பேஸ்பால் ஜாம்பவான்களான நாகஷிமா ஷிஜியோ, சதாஹரு, மேட்சுய் ஹிடெக்கி ஆகியோரிடம் அளித்தனர். கரோனாவுக்கு எதிரான பணியில் ஈடுபட்ட மருத்துவர், செவிலியரிடம் ஜோதி ஒப்படைக்கப்பட்டது.

ஒலிம்பிக் தீபம் ஏற்றிய வீராங்கணை

அதைத் தொடர்ந்து 2011-ம் ஆண்டு பூகம்பம் மற்றும் சுனாமியால் அதிகம் பாதிக்கப்பட்ட இவாட், மியாகி புகுஷிமா மாகாணங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஒலிம்பிக் ஜோதியை கைகளில் ஏந்திச் சென்று, ஜப்பானின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான நவோமி ஒசாகாவிடம் ஒப்படைத்தனர். அவர், மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த பெரிய கொப்பைரையில் ஒலிம்பிக் ஜோதியைக் கொண்டு தீபம் ஏற்றினார். இந்த தீபம் போட்டி முடிவடையும் வரை அணையாமல் தொடர்ந்து எரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடக்க விழாவின்போது 1972-ம்ஆண்டு மியூனிக் ஒலிம்பிக்கில் பாலஸ்தீனிய தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களை நினைவு கூறும் வகையில் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. 49 ஆண்டுகளில் முதல்முறையாக இந்நிகழ்வு நடந்தது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக தொடக்க விழாவில் முக்கிய விருந்தினர்கள், பிரமுகர்கள் என ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்றனர். அணிவகுப்பில் கலந்துகொண்ட வீரர்களின் எண்ணிக்கைக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.

ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நடக்கும் ஒலிம்பிக் திருவிழாவில் 205 நாடுகளைச் சேர்ந்த 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். மொத்தம் 33 விளையாட்டுகளில் 339 பிரிவுகளில் போட்டி நடத்தப்பட உள்ளது. இந்தியா சார்பில் 18 விளையாட்டுகளில் 127 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். தங்கம், வெள்ளி, வெண்கலம் என பதக்கங்களை அள்ளிக் குவிக்க வீரர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x