Published : 23 Jul 2021 07:11 AM
Last Updated : 23 Jul 2021 07:11 AM

பதிவு மூப்பு விடுபட்டவர்களுக்கு சிறப்பு சலுகை - 2 மாதங்களில் 3.42 லட்சம் பேர் புதுப்பிப்பு : வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை இயக்குநர் வீரராகவ ராவ் தகவல்

சென்னை

வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு விடுபட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு சலுகை திட்டத்தை பயன்படுத்தி, கடந்த 2 மாதங்களில் 3 லட்சத்து 42 ஆயிரம் பேர் பதிவை புதுப்பித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழக அரசின் வேலைவாய்ப்பு, பயிற்சித் துறைஇயக்குநர் கொ.வீரராகவ ராவ் ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் நேற்று கூறியதாவது:

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 67 லட்சத்து 96 ஆயிரத்து 950 பேர் பதிவு செய்துவிட்டு அரசுவேலைக்காகக் காத்திருக்கின்றனர். பதிவுதாரர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிவை புதுப்பிக்க வேண்டும். பதிவு விடுபட்டால் 18 மாதங்களுக்குள் புதுப்பித்துவிட வேண்டும். இல்லாவிட்டால் பதிவுமூப்பு காலாவதி ஆகிவிடும்.

தற்போது 2017, 2018, 2019-ம்ஆண்டுகளில் பதிவு புதுப்பிக்கப்படாமல் விடுபட்ட பதிவுதாரர்களுக்கு மீண்டும் பதிவு செய்ய, 3 மாதங்கள் சிறப்பு சலுகை வழங்கிகடந்த மே 28-ம் தேதி அரசாணைவெளியிடப்பட்டது.

அதன்படி, மேற்குறிப்பிட்ட காலகட்டத்தில் பதிவை புதுப்பிக்கத் தவறியவர்கள் ஆன்லைனில் (www.tnvelaivaaippu.gov.in/Empower) மீண்டும் புதுப்பித்து வருகின்றனர். இதுவரை 3 லட்சத்து 42 ஆயிரத்து 596 பதிவுதாரர்கள் புதுப்பித்துள்ளனர். இதற்கான அவகாசம் ஆகஸ்ட் 27-ம் தேதி வரைஉள்ளது. எனவே, இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கிறோம்.

முன்பு வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையிலும் அரசு பணிகளுக்கு பணிநியமனம் நடைபெற்று வந்தது. தற்போது போட்டித் தேர்வு மூலமாகவே பெருமளவு பணி நியமனங்கள் நடைபெறுகின்றன. அந்த வகையில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்களை டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட தேர்வாணையங்கள் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்த வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்துகிறோம்.

தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறும் வகையில் மாநில தொழில்திறன் மேம்பாட்டுக் கழகம் மூலமாக திறன் மேம்பாட்டுப் பயிற்சியும் அளித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x