Published : 23 Jul 2021 07:13 AM
Last Updated : 23 Jul 2021 07:13 AM

ராகுல் காந்தியின் செல்போன் ஒட்டுக்கேட்கப்பட்ட விவகாரம் - மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் போராட்டம் : ஆளுநர் மாளிகையை நோக்கி சென்றவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்

ராகுல் காந்தியின் செல்போனை ஒட்டுக்கேட்ட மத்திய அரசைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நேற்று நடைபெற்றது. ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியாகச் சென்றவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.

இஸ்ரேலைச் சேர்ந்த பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டவர்களின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல்வாதிகள், உச்ச நீதிமன்ற நீதிபதி உள்ளிட்டோரின் செல்போன்களும் ஒட்டுக்கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் செல்போன்களை ஒட்டுக்கேட்கும் மத்திய அரசின் போக்கைக் கண்டித்து சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் 22-ம் தேதி நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் அறிவித்திருந்தது. அதன்படி, நேற்று சைதாப்பேட்டை ராஜீவ் காந்தி சிலை அருகே காங்கிரஸ் கட்சியினர் கூடினர். முன்னதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட தலைவர்கள் ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதையடுத்து வேளச்சேரி பிரதான சாலையில் அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு தலைவர்கள் வந்தனர். செல்போன்களை ஒட்டுக்கேட்கும் மத்திய அரசின் போக்கை கண்டித்து முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஆர்.ராமசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் ரூபி மனோகரன், ராஜேஸ்குமார், முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவர் செல்வ பெருந்தகை ஆகியோர் பேசினர்.

இக்கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது:

ஜனநாயகத்துக்கு புறம்பாக பாஜக அரசின் தொலைபேசி ஒட்டுக்கேட்கும் போக்கைக் கண்டித்து இப்போராட்டம் நடைபெறுகிறது. நாட்டை ஆளும் அரசை நம்பித்தான் மக்கள் வாழ முடியும். இந்தியாவை ஆளும் பாஜக அரசே அரசியல் கட்சித் தலைவர்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரின் தொலைபேசியை ஒட்டுக் கேட்டால் அவர்களது வாழ்க்கை முறை என்னவாகும்.

இந்த விவகாரம் வெளிவந்த உடனே பிரதமர் மோடி வெள்ளை அறிக்கை வெளியிட்டிருக்க வேண்டும். உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்திருக்க வேண்டும். அதற்குப் பதிலாக ஜனநாயகத்தைக் காலில் போட்டு நசுக்குகிறார்கள். இந்நிலை நீடித்தால் நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பதவி விலக வேண்டும், செல்போன்களை ஒட்டுக்கேட்டது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் கோஷம் எழுப்பினர். ஆளுநர் மாளிகையை நோக்கி ஊர்வலமாகப் புறப்பட்ட காங்கிரஸாரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். சாலையின் குறுக்கே வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை நெருங்கியதும் கலைந்து செல்லும்படி போலீஸார் கேட்டுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் காங்கிரஸார் கலைந்து சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x