Published : 22 Jul 2021 03:13 AM
Last Updated : 22 Jul 2021 03:13 AM

தமிழக நீர்ப்பாசனத் திட்டங்களை எதிர்க்கும் - கர்நாடக அரசின் மனு மீது சட்ட நடவடிக்கை வேண்டும் : முதல்வர் ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வேண்டுகோள்

காவிரி- வைகை - குண்டாறு இணைப்பு உள்ளிட்ட திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை உடனடியாக தள்ளுபடி செய்வதற்கு தேவையானசட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

வெள்ளப்பெருக்கின் போது காவிரி, கொள்ளிடம், ஆறுகளில் இருந்து கடலில் கலக்கும் உபரிநீரை திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் கரூர்மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவைக்கும், லட்சக்கணக்கான ஏக்கர் நிலம்பாசன வசதி பெறும் வகையில், ரூ.14,400 கோடி மதிப்பிலான இத்திட்டத்தின் முதல் கட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டுவிழா அதிமுக ஆட்சியில் கடந்த பிப்.14-ம் தேதி நடைபெற்றது.

தற்போது வேண்டுமென்றே தங்களுக்கு தொடர்பில்லாத தமிழகத்தில் நிறைவேற்றப்பட உள்ள நீர்ப்பாசன திட்டங்களுக்கு தடை கேட்டு கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. சென்னை -மைசூர் மாகாணங்கள் இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தப்படி, தமிழகத்தின் அனுமதி பெறாமல் அணைகளை கட்டக்கூடாது.

இதையும், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பையும் மீறி மேகேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிக்கும் போது அதை தமிழகம் எதிர்க்கிறது.

அதேநேரம் காவிரி- வைகை-குண்டாறு இணைப்புத்திட்டம், மேட்டூர்-சரபங்கா நீரேற்றுத்திட்டம், நாகப்பட்டினம், கரூர்,அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தடுப்பணைகள் கட்டும்திட்டம் ஆகியவற்றை செயல்படுத்துவதால், தமிழகத்தில் வீணாக கடலில் கலக்கும் உபரி நீர் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு திருப்பிவிடப்படுமே தவிர, கர்நாடகத்துக்கு எவ்வித பாதகமும் ஏற்படாது. எனவே, தமிழகத்துக்குள் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவிப்பது என்பது பொறாமையின் வெளிப்பாடு. கர்நாடக அரசின் கெடுமதி எண்ணம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.

தமிழகத்தின் நீர்ப்பாசன திட்டங்களுக்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றத்தில் மனு செய்ய கர்நாடக அரசுக்கு எவ்வித முகாந்திரமும் இல்லை. எனவே, தமிழக முதல்வர் இதில் உடனடியாக கவனம் செலுத்தி, கர்நாடக மனுவை உடனடியாக தள்ளுபடி செய்யத் தேவையான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x