Published : 22 Jul 2021 03:13 AM
Last Updated : 22 Jul 2021 03:13 AM

தொழிலாளர்கள் நலவாரிய பதிவை அரசு எளிமைப்படுத்த வேண்டும் : அமைச்சரிடம் சிஐடியு வலியுறுத்தல்

தொழிலாளர்களின் நலவாரிய பதிவை அரசு எளிமைப்படுத்த வேண்டுமென தொழிலாளர் நலத்துறை அமைச்சரிடம் சிஐடியு வலியுறுத்தியுள்ளது.

சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் தலைமையில் தையல், ஆட்டோ, அமைப்புசாரா, சலவை ஆகிய 4 வாரியங்கள் தொடர்பான கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு ) சார்பில் அமைச்சரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. சிஐடியு பொதுச்செயலாளர் எம்.சிவாஜி, செயல்தலைவர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் ஏ.எல்.மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதுதொடர்பாக சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் எம்.சிவாஜி நேற்று கூறியதாவது: ஆன்லைன் பதிவு என்பது சாதாரண ஆட்டோ தொழிலாளியை சென்று சேரும் நிலையில் இல்லை என்பதை கவனத்தில் கொண்டு நலவாரிய பதிவை எளிமைப்படுத்த வேண்டும். ஆன் லைன் பதிவோடு நேரடியாக பதியவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய நலவாரிய பதிவுக்கு ஆதார் அட்டை எண் மட்டும் பதிவு செய்யலாம். ஒருமுறை கடவுச்சொல் கேட்பதை தவிர்க்க வேண்டும்.

ஆன்லைன் புதிய வாரிய பதிவு சரிபார்க்கும் காலம் 60 நாள் என்பதை குறைத்து, உடனுக்குடன் அட்டை வழங்கிட வேண்டும். பலகுளறுபடிகளுக்கு காரணமாக இருக்கிற வருவாய்த்துறை மூலம் சான்று அளிக்க வேண்டும் என்றிருப்பதை கைவிட வேண்டும். நலவாரிய பதிவில் சாதி கேட்பதை தவிர்க்க வேண்டும்.

ஆட்டோ தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் ஏற்படுத்த வேண்டும். கடந்த 2019-2020, 2020-2021 க்கான கல்வி உதவித்தொகை வழங்கிட வேண்டும். திருமண உதவி நிதியை 25 ஆயிரம் என உயர்த்த வேண்டும். இயற்கை மரணத்துக்கு ரூ.1 லட்சமும் விபத்து மரணத்துக்கு ரூ.5 லட்சமாகவும் உயர்த்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x