Published : 22 Jul 2021 03:15 AM
Last Updated : 22 Jul 2021 03:15 AM

அங்கன்வாடி கட்டிடத்தின் கூரை இடிந்து விழுந்தது :

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி ஊராட்சியில் அங்கன்வாடி கட்டிடம் உள்ளது. இங்கு, மண்டலவாடி மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வந்தனர். கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஓராண்டுக்கு மேலாக மாணவர்கள் கல்வி பயில வருவதில்லை.

இருப்பினும், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தினசரி இங்கு வந்து அலுவலக பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஜோலார்பேட்டை சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் பழமை வாய்ந்த அங்கன்வாடி கட்டிடத்தின் சுவர் மற்றும் மேற்கூரையில் ஈரப்பதம் காணப் பட்டது.

பக்ரீத் பண்டிகையை யொட்டி அங்கன்வாடி கட்டிடத்துக்கு நேற்று யாரும் வரவில்லை. இந்நிலையில், நேற்று பிற்பகல் 1 மணியளவில் அங்கன்வாடி கட்டிடத்தின் மேற்கூரை திடீரென பெயர்ந்து விழுந்தது. சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடிச் சென்று பார்த்த போது மாணவர்கள் கல்வி பயிலும் வகுப்பறையின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது தெரியவந்தது. மாணவர்கள் யாரும் இல்லாததால் அசம்பாவித சம்பவம் ஏதும் நிகழவில்லை.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடத்தில் மாணவர்களுக்கு பாடம் நடத்துவது ஆபத்தான செயல். எனவே, பழமையான கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x