Published : 21 Jul 2021 03:14 AM
Last Updated : 21 Jul 2021 03:14 AM

தனியார் மருத்துவமனைகளில் இலவச கரோனா தடுப்பூசிக்கு நடவடிக்கை : சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

கோவை சின்னியம்பாளையத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கான கரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமைஅமைச்சர் மா.சுப்பிரமணியன், உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் பார்வையிட்டனர். அதைத் தொடர்ந்து, தமிழக- கேரள எல்லைப் பகுதியானவாளையாறு சோதனைச்சாவடியில் ஜிகா வைரஸ் மற்றும்கரோனா தொற்று தடுப்பு பணிகளை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கரோனா உருமாறி டெல்டா, டெல்டா பிளஸ் போன்ற புதிய வகை வைரஸ்கள் பரவுகின்றன. அதேபோல, டெங்குவின் தொடர்ச்சியாக ஜிகா வைரஸ் பரவி வருகிறது. ஜிகா வைரஸ் கர்ப்பிணிகளை தொற்றினால், சிறிய அளவிலான தலையுடன் குழந்தை பிறக்கலாம். தமிழகத்தில் ஜிகா வைரஸ் இல்லை. முதல்வர் உத்தரவுப்படி, வாளையாறு அருகே பழைய தெரு, மாவுத்தம்பதி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நேரடியாக சென்று 95 வீடுகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தினேன்.

ஒரு ஊராட்சிக்கு 10 பேர் வீதம்,பேரூராட்சிக்கு 20 பேர் வீதம் விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 21 ஆயிரம் பேர் கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஜனவரியில் தொடங்கி தற்போது வரை, 2,500 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கானசிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்து கோவைக்குதான் அதிக அளவில் கரோனா தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோவையில் 10 லட்சத்து 97 ஆயிரம் டோஸ் போடப்பட்டுள்ளது. இன்னமும் விரைவுபடுத்தப்பட உள்ளது.

மத்திய அரசு 75 சதவீதம் மாநில அரசுகளுக்கும், 25 சதவீதம் தனியார் மருத்துவமனைகளுக்கும் தடுப்பூசியை வழங்குகிறது. தொழில்நிறுவனங்களின் சி.எஸ்.ஆர் நிதியை பயன்படுத்தி, தனியார் மருத்துவமனையில் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்துக்கு 1 கோடியே 86 லட்சத்து 37 ஆயிரத்து 670 தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளன. இதில் 1 கோடியே 82 லட்சத்து 38 ஆயிரத்து 988 தடுப்பூசிகள் போடப்பட்டுஉள்ளன. 1.90 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

தவிர, 5 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்துக்கு வர உள்ளன. மொத்தம் 12 கோடி தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6 கோடி பேர் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x