Published : 20 Jul 2021 03:14 AM
Last Updated : 20 Jul 2021 03:14 AM

தமிழகத்துக்கு கருணாநிதி விலக்கு பெற்றார் - காங்கிரஸ் ஆட்சியில்தான் நீட் தேர்வு வந்தது : சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின்போது நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. அப்போது கூட்டணியில் இருந்தபோதும், தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து கருணாநிதி விலக்கு பெற்றார் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை கே.கே.நகரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைக்கு நேற்று வந்த சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முழு கவச உடை அணிந்துகொண்டு, கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் நலம் விசாரித்தார். டீன் சவுமியா, மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, மருத்துவம், ஊரக நலப் பணிகள் துறை இயக்குநர் குருநாதன், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை டீன் சாந்திமலர், விருகம்பாக்கம் எம்எல்ஏ பிரபாகர்ராஜா ஆகியோரும் முழு கவச உடை அணிந்து உடன் சென்றனர்.

பின்னர், கே.கே.நகரில் உள்ள புறநகர் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் மையத்தை அமைச்சர் ஆய்வு செய்தார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கரோனா இன்னும் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. 18-ம் தேதிகூட 2,079 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3-வது அலை வரும் என்று உலக சுகாதார நிறுவனம், ஐசிஎம்ஆர் அமைப்பினர், மருத்துவ வல்லுநர்கள் தொடர்ந்து கூறிவருகின்றனர். அதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன.

மத்திய அரசிடம் இருந்து இதுவரை 1 கோடியே 80 லட்சத்து 32,170 தடுப்பூசிகள் வந்துள்ளன. இதில், 1 கோடியே 80 லட்சத்து 3,327 செலுத்தப்பட்டுள்ளன. கையிருப்பில் உள்ள 3.42 லட்சத்தில் 19-ம் தேதி (நேற்று) மாலைக்குள் 2.50 லட்சம் போடப்பட்டுவிடும். தடுப்பூசி செலுத்தும் பணியில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை அரசே ஏற்று நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2011-ம் ஆண்டு நீட் தேர்வு வந்தபோது, மத்தியில் காங்கிரஸ்தான் ஆட்சியில் இருந்தது. அப்போது, அவர்களுடன் கூட்டணியில் திமுக இருந்தது. ஆனாலும், தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, தமிழகத்துக்கு நீட் தேர்வு வேண்டாம் என்று விலக்கு பெற்றார். கருணாநிதி முதல்வராக இருந்தபோதும், பின்னர் முதல்வராக வந்த ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரையும் நீட் தேர்வை தமிழகத்தில் அனுமதிக்கவில்லை.

முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்ற பிறகுதான் தமிழகத்துக்கு நீட் தேர்வு வந்தது. நீட் தேர்வால் 13 மாணவ, மாணவிகள் உயிரிழந்தனர். திமுக வலியுறுத்தியதால் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினர். அந்த தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. கிராமப்புற மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வேண்டும் என திமுக கோரிக்கை வைத்தது. அப்போதுதான், வேறு வழியின்றி 7.5 சதவீதத்துக்கு ஒப்புக்கொண்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x