Published : 19 Jul 2021 03:13 AM
Last Updated : 19 Jul 2021 03:13 AM

மாநகராட்சி சார்பில் இன்றுமுதல் 5 நாட்களுக்கு - தீவிர தூய்மைப் பணி மீண்டும் தொடக்கம் : 3,800 டன் குப்பை கழிவுகளை அகற்ற இலக்கு

சென்னை

சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மாநகராட்சி பகுதிகளில் நீண்ட நாட்களாக தேங்கிக் கிடக்கும் குப்பைகள் மற்றும் கட்டிடக் கழிவுகளை அகற்ற மாதந்தோறும் ஒரு வாரத்துக்கு தீவிர தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் கடந்த மே மாதம் மாநகராட்சி சார்பில் தொடர்ந்து 10 நாட்களுக்கு தீவிர தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு, நீண்ட நாட்களாக தேங்கியிருந்த 3,260 டன் குப்பைகள் மற்றும் 10,085 டன் கட்டிடக் கழிவுகள் என மொத்தம் 13,345 டன் கழிவுகள் அகற்றப்பட்டன. கடந்த ஜூன் மாதம் ஒரு வாரம் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு மொத்தம் 8,700 டன் கழிவுகள் அகற்றப்பட்டன.

இம்மாத தீவிர தூய்மைப் பணியை இன்று (ஜூலை 19) முதல் 23-ம் தேதி வரை மேற்கொள்ள திட்டம் வகுக்கப்பட்டு, 320 இடங்களில் சுமார் 1,300 டன் குப்பைகள் மற்றும் 2,500 டன் கட்டிடக் கழிவுகளை அகற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொது இடங்கள், அரசு கட்டிடங்கள் மற்றும் பாலங்கள் போன்றவற்றில் 5,688 இடங்களில் ஒட்டப்பட்ட 52 ஆயிரத்து 043 சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளன. 24-ம் தேதி தூய்மை பணியாளர்கள் மற்றும் சாலைப் பணியாளர்களை கொண்டு சுவரொட்டிகள் அகற்றும் பணி முழுவீச்சில் நடைபெறவுள்ளது.

மாநகராட்சியின் 15 மண்டலங்களில் ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட தீவிர தூய்மைப் பணியில் தண்டையார்பேட்டை மண்டலம் சிறப்பாக செயல்பட்டு 113 டன் குப்பைகள், 519 டன் கட்டிடக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.

இப்பணிகளை பாராட்டி தண்டையார்பேட்டை மண்டல அலுவலர் எஸ்.வெங்கடேசன், செயற்பொறியாளர்கள் எம்.காமராஜ், எம்.விக்டர் ஞானராஜ், துப்புரவு கண்காணிப்பாளர் எ.ஹரி, துப்புரவு ஆய்வாளர் எச்.சரவணன் ஆகியோருக்கு மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி சான்றிதழ்களை வழங்கினார். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x